முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.
நான் இந்திய நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டேன். பரீட்சார்த்தமாக எனக்கு எல்லையில்லா அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. என்னைக் கேள்வி கேட்பார் யாருமில்லை.
இந்த மாதிரி நடந்தால் என்ன செய்வது என்று நான் தூக்கம் வராத இரவுகளில் ஏற்கனவே யோசித்து வைத்திருந்ததனால் நான் பெரிதாக ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. சில நடைமுறை சந்தேகங்கள் மட்டும் இருந்தன. என்னுடைய முதன்மை செக்ரடரியைக் கூப்பிட்டு விசாரித்தேன்.
அவர் சொன்னதாவது. சார் நீங்கள் காகிதத்தில் என்ன எழுதிக் கையெழுத்துப் போடுகிறீர்களோ அந்த உத்திரவுகள் அடுத்த விநாடி நிறைவேற்றப்படும் என்றார். ஏனய்யா, இவ்வளவு பெரிய நாட்டின் ஜனாதிபதி அவரே எழுத வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர், சார் உங்களுக்காக 347 ஸ்டேனோக்கள் நியமிக்கப்பட்டு ரெடியாக இருக்கறார்கள் என்றார்.
அது சரி, உங்கள் மாதிரி எத்தனை செக்கரட்டரிகள் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவர், என்னையும் சேர்த்து பல கிரேடுகளில் 2492 செக்ரட்டரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னார். அப்படியா, சரி என்று சொல்லி விட்டு, ஒரு நல்ல, இங்கிலீஷ் தெரிந்த ஸ்டெனோவைக் கூப்பிடுங்கள் என்று சொன்னேன்.
அவர் இன்டர்காமில் என்னமோ சொல்ல, உடனே ஒரு சினிமா நடிகை உள்ளே வந்தாள். இது யார் என்று கேட்க, சார், இதுதான் உங்கள் முதன்மை ஸ்டனோ என்றார். அப்படியா, முதலில் இந்தப் பெண்ணை, மேக்கப் எல்லாம் கலைத்துவிட்டு வரச்சொல்லுங்கள் என்றேன். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான அம்மாள் உள்ளே வந்தார்கள்.
செக்ரட்டரியிடம் யாரய்யா இது என்று கேட்டேன். சார், முன்னால் பார்த்தீர்களே, ஸ்டெனோ, அவர்கள்தான் இது, மேக்கப்பைக் கலைத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்றார். சரி, இப்போதைக்கு இருக்கட்டும், நாளையிலிருந்து எனக்கு, ஒரு நல்ல பையனாப்பார்த்து ஸ்டெனோவாப் போட்டுடுங்க என்றேன்.
என்னுடைய அதிகாரம் இந்த செக்ரட்டரி சொன்னமாதிரிதான் இருக்கிறதா என்பதைச் சோதிக்க ஒரு டெஸ்ட் செய்தேன். இந்த முதன்மை செக்ரட்டரி தவிர மீதமுள்ள 2491 செக்ரட்டரிகளையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பவும் என்று ஆர்டரை டைப் செய்து எடுத்துக்கொண்டு வா என்று ஸ்டெனோவிடம் சொன்னேன். அந்த அம்மா வெளியில் போனார்கள்.
என்ன, செக்ரட்டரி, என்று திரும்பிப் பார்த்தால், செக்கரட்டரி மயக்கமாகக் கீழே விழுந்து கிடந்தார்.
தொடரும்........
///முன்னால் பார்த்தீர்களே, ஸ்டெனோ, அவர்கள்தான் இது, மேக்கப்பைக் கலைத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்றார்.///
பதிலளிநீக்குஹா.. ஹா.. பல வரிகள் சிரிக்க வைக்கின்றன. கனவுகள் தொடரட்டும் சார் ! நன்றி ! (TM 2)
// இந்தப் பெண்ணை, மேக்கப் எல்லாம் கலைத்துவிட்டு வரச்சொல்லுங்கள் என்றேன். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான அம்மாள் உள்ளே வந்தார்கள்.
பதிலளிநீக்கு//
ஹா ஹா ஹா உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள் கூட சேர்ந்து சவாரி செய்கிறேன். முதல் ஆர்டரிலேயே அதகளம் செய்து விடீர்கள்
கலாம் காணச் சொன்ன கனவு இதுவா?
பதிலளிநீக்குவெளிநாட்டுப் பயணம் ஏற்பாடு செஞ்சுட்டு உடனே நியூஸிக்கு வாங்க. தனி விமானமா இருக்கட்டும் ஆமா!
அருமையான கற்பனை! இப்படியே நடக்குமானால்
பதிலளிநீக்குநாடு விரைவில் முன்னேறும்!
சா இராமாநுசம்
347 ஸ்டேனோக்களா? சிரிக்கவும் சிந்திக்கவும் ...
பதிலளிநீக்குநல்ல கனவு! பலிக்கட்டும்!
பதிலளிநீக்குநல்ல வேளை ....தப்பித்தேன் நான் உங்க செக்ரடரியா இல்ல....இருந்தா 'யாரடா இந்த கிழம் ?" என்று என்னை சும்மா கைம்மா பண்ணிப் போட்டிருப்பீர்கள் !!
பதிலளிநீக்கு