செவ்வாய், 3 ஜூலை, 2012

வீட்டைச் சுற்றி செடிகள் வளர்க்க.


திரு கந்தசாமி ஐயா,
வீடுகளுக்கான மழைநீர் மேலாண்மை மற்றும் உப்பாகி விட்டிருக்கும் மண்ணை வளப்படுத்துவதற்குமான ஆலோசனைகள் இருப்பின் விவரமாகப் பதியவோ அல்லது மடலிடவோ வேண்டுகிறேன்.

நல்ல செடிகள் வளரும் மண்ணாக இருந்த இடத்தில் போர் போட்டதால் வெளி வந்த கருங்கல் (மென்மையான பொடி போன்ற) மணலைக் கொட்டியதில் எந்த செடியும் இப்போது வளர்வதில்லை.

மேலும் செடிகள் வளராத மண்ணில் வளமாக்க ஏதும் செய்ய முடியுமா? வீட்டைச் சுற்றி இருக்கும் இடமென்றாலும் செடிகள் வளர்க்க முடியாதிருப்பது வருத்தமாயிருக்கிறது.

நீங்கள் துறை சார்ந்த நிபுணராக இருப்பதால் உங்களுக்கு விண்ணப்பம்.

nanbann at gmail dot com க்கு அனுப்ப வேண்டுகிறேன்.
=================================================================================

ஒரு விஷயத்தைப் பற்றி ஒண்ணுமே தெரியாம இருந்து, அதக் கத்துக்கறதுக்கு ஆரம்பிச்சா, சீக்கிரம், சிரமமில்லாம கத்துக்கலாம். குழந்தைகள் அதனால்தான் மூன்று மொழிகளை சீக்கிரமே கற்றுக்கொள்கின்றன. அரைகுறையாப் படிச்சிருக்கிறவங்களுக்கு, அதைப் பற்றி முழுசா சொல்லிக்கொடுக்கிறது இருக்கே அது ரொம்ப, ரொம்பக் கஷ்டம்.

இங்கு அறிவன் அவர்கள் அப்படிப்பட்ட வேலையை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். முயற்சிக்கிறேன்.

நீங்கள் செடிகளை நேசிப்பவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் செடிகளை வளர்க்க ஆசைப்படுவீர்கள். தாராளமாக வளர்க்கலாம். கொஞ்சம் பணம் செலவாகும். குழந்தைகளை வளர்ப்பதும் செடிகளை வளர்ப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். தொடர்ந்த பராமரிப்பு தேவை.

தாவரங்களின் சிறப்பு, மூலப் பொருள்களில் இருந்து அவை தங்கள் உணவை தயார் செய்து கொள்ளும். நமக்கு தயார் செய்த ரெடிமேட் உணவு தேவை. செடிகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் மண்ணிலிருந்துதான் கிடைக்கவேண்டும். மண்ணில் அந்த மூலப்போருட்கள் தங்கியிருந்து வளரும் செடிகளுக்குக் கொடுக்கவேண்டும். இது இயற்கையான மண்ணில் மட்டுமே நடக்கும். செயற்கை மண்ணில் நடக்காது.

நான் செயற்கை மண் என்று சொன்னது போர் கிணற்றிலிருந்து வெளி வந்த பாறைப்பொடியை. அது மண் மாதிரி இருந்தாலும் மண்ணின் குணங்கள் ஒன்றும் அதற்கு இல்லை. அதனால் அதில் செடிகள் வளராது. செடிகளை நிலத்தில் வளர்க்க வேண்டுமென்றால் மண்ணை மாற்றவேண்டும். இது மிகுந்த பொருட்செலவு ஆகும் சமாசாரம். மாற்றாக தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம். மாடியில் குடியிருப்பவர்கள் கூட இந்த முறையில் செடிகளை வளர்க்கலாம்.

தொட்டிகளில் செடி வளர்க்கப் போடவேண்டியது Pot Mixture என்று சொல்லப்படும் மணல், செம்மண், தொழு உரம் ஆகிய மூன்றும் சரிவிகிதத்தில் கலக்கப்பட்ட ஒரு மிக்சர். இதில்தான் செடிகள் நன்றாக வளரும்.

அடுத்ததாக செடிகளுக்கு வேண்டியது நல்ல நீர். கிணற்று நீர் உப்பாக இல்லாத பட்சத்தில் உபயோகப்படுத்தலாம். உப்பு நீரைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். தண்ணீரைப் பிடித்து ஒரு வாளியில் இரண்டு நாள் வைத்திருக்கவும். இரண்டு நாள் கழித்து நீரின் மேல் மட்டத்தில் உப்புப் படிவங்கள் ஒரு ஆடைபோல் படிந்திருந்தால் அந்த நீரில் உப்பு இருக்கிறது என்று கண்டு கொள்ளலாம். இந்த நீரை உபயோகித்தால் செடிகள் அவ்வளவு செழித்து வளராது.

சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறேன். மேலும் விபரங்கள் வேண்டுபவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பதிலளிக்கிறேன்.

10 கருத்துகள்:

 1. எங்க பக்கங்களில் பாட்டிங் மிக்ஸ் தயாரிப்பு இது.


  பைன் மரப்பட்டைகளை நல்லாத் துருவிக்கணும். அதனுடன் கொஞ்சம் கம்போஸ்ட்டும் ஆத்துமண்ணும் சேர்த்துக் கலந்து ஒரு பெரிய தொட்டியில் நல்லா அடைச்சு வச்சுடணும். மூணு மாசம் கழிச்சுப்பார்த்தால் அது மக்கியிருக்கும். செடிவளர்வதற்குத் தேவையான உரம் கொஞ்சம் சேர்த்துக் கலந்தால் பாட்டிங் மிக்ஸ் ரெடி.

  வேற வகை மரத்தூள் சேர்த்தாலும் சரின்னுதான் நினைக்கிறேன்.

  அறிவன்,

  அந்த மணல் தூளை எல்லாம் வாரி ஒரு ஸேன்ட் பாக்ஸ் செஞ்சுட்டால்..... குழாந்தைகளுக்கு வீட்டிலேயே பீச்!

  நான் வீட்டின் ரெண்டு பக்கமும் ஈஸி மெயின்டனன்ஸ் என்று சின்னச்சின்ன பொடிக்கற்கள் (பெப்பிள்ஸ்) போட்டு வச்சுருக்கேன். பெப்பிள் பீச்:-))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கயெல்லாம் இப்ப இயற்கை உரம் என்பதே மறந்து போச்சு.

   நீக்கு
 2. வீட்டின் பக்கவாட்டில் ஐந்தடி இடம் விட்டு இருக்கிறோம். மதியம் ஒரு மணிநேரம் மட்டுமே
  அவ்விடங்களில் வெய்யில் வருகிறது. அங்கு வைத்த ஜாதி மல்லி வளராமலேயே போய்விட்டது.
  அங்கு என்ன செடி வைக்கலாம்? பூ செடி ஏதாவது வைக்க முடியுமா? இப்பொழுது நான்கு
  குரோட்டன்ஸ் வைத்துள்ளேன்.
  என் கேள்வி குறைவான வெய்யில் படும் இடத்தில் என்ன செடி வைக்கலாம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் இப்போது வைத்திருக்கும் குரோட்டன்கள்தான் நல்லது.

   நீக்கு
 3. இப்போதெல்லாம் செடி வளர்த்தலை யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை. அப்படியே ஆசை வந்தாலும் சின்ன பாட்டிலில் போட்டு வீட்டுக்குள் வைத்து கொள்கிறார்கள். மிகவும் மன நிம்மதி தரும் ஒரு ஹாபி இது. பகிர்வுக்கு நன்றிகள் சார்

  பதிலளிநீக்கு
 4. . குழந்தைகளை வளர்ப்பதும் செடிகளை வளர்ப்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். தொடர்ந்த பராமரிப்பு தேவை.
  அழகான பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 5. நல்ல கருத்துகள் சார் ! நன்றி !
  செடிகளை வளர்ப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் அதில் மொட்டு விட்டு, பூவாக மலரும் போது, நமக்கு வரும் சந்தோசம் இருக்கே... என்னவென்று சொல்வது ?

  பதிலளிநீக்கு