திங்கள், 16 ஜூலை, 2012

வால்பாறை சுற்றுலா

வால்பாறைக்குப் போகவேண்டும் என்று பலநாட்களாக கனவு கண்டு கொண்டிருந்தது இப்போது நிறைவேறியது.

வால்பாறை ஒரு சிற்றூர். மேற்கு மலைத்தொடரில் 4000 அடி உயரத்தில் உள்ளது. மிதமான குளிரும் நல்ல காற்றும் உள்ள ஊர். தென்மேற்குப் பருவ மழை காலத்தில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டிய ஊர். எங்கள் வருகையை முன்னிட்டு மழைக்கு லீவு விட்டிருந்தார்கள்.

கோவையிலிருந்து 105 கி.மீ. தூரம். பொள்ளாச்சி சென்று அங்கிருந்து ஆழியார் அணை வழியாக மலை அடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து சரியாக 40 கி.மீ. தூரம்.


இந்த 40 கி.மீ. தூரத்தில் 40 ஹேர்பின் பெண்டுகள், அதாவது கொண்டை ஊசி வளைவுகள். ரோடு அருமையாக இருக்கிறது. ஆனால் இத்தனை வளைவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயமும் மனதிற்குள் இருந்தது.

கார் ஒட்டுபவர்கள் கவனத்திற்கு. நான் கூறும் நான்கு விதிகளையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. பயம் வேண்டும். எவ்வளவு அனுபவம் வாய்ந்த ஓட்டுனராக இருந்தாலும் எந்த சமயத்திலும் விபத்து நேரலாம் என்ற பயம் மனதிற்குள் இருக்கவேண்டும். எப்போது நான் விபத்துக்கு அப்பாற்பட்டவன் என்று ஒரு ஓட்டுனர் நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் விபத்தைச் சந்திப்பார்.

2. பொறுமை வேண்டும். வாகனம் ஓட்டும்போது பொறுமை அதிகம் வேண்டும். ரோட்டில் போகும் மற்ற வாகனங்கள், மனிதர்கள், விலங்குகள், குண்டு குழிகள், இவை எல்லாம் பொறுமையைச் சோதிக்கும்.

3. கவனம் சிதறாமை. உங்கள் கவனம் முழுவதும் கார் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டுமே தவிர, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதிலோ, அரட்டை அடிப்பதிலோ இருக்கக் கூடாது.

4. வாகனத்தின் தன்மை. நீங்கள் ஓட்டும் வாகனத்தின் தன்மையை நன்கு அறிந்து, அதற்கு ஏற்ற மாதிரி ஓட்டவேண்டும். 5 பேர் போகக்கூடிய வாகனத்தில் 10 பேர் ஏறிக்கொண்டு சென்றால் விபத்து நிச்சயம். 80 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வாகனத்தை 120 கி.மீ. வேகத்தில் ஓட்டினால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்.

இந்த விதிகளை மறக்காமல் கடைப்பிடித்ததினால் எங்கள் பயணம் விபத்தில்லாமல் இனிதே இருந்தது. ரோடு அருமையாக இருந்தது. வழியெங்கிலும் பசுமையான காட்சிகள்.

இந்த 40 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்தோம்.

மதியம் சாப்பாட்டு நேரத்திற்கு வால்பாறை போய்ச்சேர்ந்தோம். நணபர் கையோடு தயிர் சாதம் கொண்டு வந்திருந்தார். ஆகவே உணவு விடுதியைத் தேடாமல் எங்கள் மதிய உணவை முடித்தோம்.

எங்கள் பொது நண்பர் ஒருவர் வால்பாறையில் பொறியாளராக இருக்கிறார். அவர் எங்களுக்குத் தங்க நல்ல அரசு விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். நல்ல வசதிகளும் விசாலமான அறைகளும் இருந்தன.


விடுதிக்கு அருகாமையில் (ஐந்து கி.மீ. தூரத்தில்- காட்டுப்பாதை-போகவர 2 மணி நேரம் மட்டுமே ஆகும்) ஒரு தம்பதியினர் நடத்தும் 5 ஸ்டார் ரெஸ்டாரென்ட் ஒன்று இருக்கிறது.


இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பார், குருமா, கோழி குருமா, கோழி வருவல் எல்லாம் வீட்டு முறைப்படி தயாரித்துக் கொடுத்தார். அன்னதாதா அவர். நீடு வாழ்க.

போகும் வழியில் கீழ் நீரார், மேல் நீரார் என்று இரண்டு அணைகளைப் பார்த்தோம்.


கீழ் நீரார் அணைமேல் நீரார் அணை

இந்த அணைகளிலிருந்து சுரங்கங்கள் மூலமாக நீர் சோலையார் டேமுக்கு வந்து அங்கிருந்து மீண்டும் சுரங்கங்கள் மூலமாக ஆழியார், மற்றும் திருமூர்த்தி அணைக்கட்டுகளுக்கு வந்து சேருகின்றன.

இரவு உணவு முடித்து படுத்ததுதான் தெரியும். விழிப்பு வந்தபோது நன்கு விடிந்திருந்தது. பயணக் களைப்பு அப்படி ஒரு தூக்கத்தைப் பரிசாக்கியிருந்தது.  
காலையில் பெட் காப்பி இல்லையென்றால் என்ன வாழ்க்கை? காப்பி கிட் (சொந்த தயாரிப்பு) கொண்டு போயிருந்ததினால் நல்ல காப்பி போட்டு சாப்பிட்டோம்.

குளித்து முடித்து 8 மணிக்கு கிளம்பி நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் டிபன் சாப்பிட்டு விட்டு பாலாஜி கோவில் பார்க்கப்போனோம். வால்பாறையிலிருந்து 6 கி.மீ. தூரம். இது ஒரு தனியார் கோவில். நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கெடுபிடிகள் அதிகம். தனியார் வாகனங்கள் ஒரு கி.மீ. தூரத்திலேயே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து நடந்துதான் போகவேண்டும். டாக்சிகள் அனுமதிக்கப்படுகின்றன.
காலை 7 மணியிலிருந்து பகல் 12 வரையிலும் மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 

பிறகு சோலையார் டேம் பார்க்கக் கிளம்பினோம். வால்பாறையிலிருந்து 20 கி.மீ. தூரம். நல்ல ரோடு. வழியெங்கிலும் தேயிலைத் தோட்டங்கள்தான். மரகதக் கம்பளம் விரித்த மாதிரி எங்கு பார்த்தாலும் பசுமைதான். ஆயுசுக்கும் அங்கேயே இருந்துவிடலாம் என்று மயக்கும் இயற்கைக் காட்சிகள்.இந்த டேமிலிருந்துதான் நீர் ஆழியாருக்கும் திருமூர்த்தி டேமுக்கும் வருகிறது.

மதிய உணவு இங்கே சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பவும் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினோம். திரும்பும் வழியிலேயே நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் நமக்காக ஸ்பெஷலாகத் தயாரித்த நாட்டுக்கோழி வருவலும், குருமாவும், சப்பாத்தியையும் வாங்கிக்கொண்டோம். ரெஸ்ட் ஹவுசில் அவைகளை ஒரு கை பார்த்தோம். அந்த மிதமான குளிருக்கு ரெஸ்ட் ஹவுஸ் அடக்கமாக இருந்தது. தூக்கம் நன்றாக வந்தது.

அடுத்த நாள் எழுந்து குளித்து விட்டு, நமது ரெஸ்டாரென்டில் காலை டிபன் முடித்து விட்டு, எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு, திரும்பவும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஆழியார் டேம் பக்கத்திலுள்ள குரங்கு அருவிக்கு வந்து சேர்ந்தோம்.

அருவியில் குளிக்க இன்னும் இரண்டு கி.மீ. தொலைவு சென்று டிக்கட் வாங்கு வரவேண்டும் என்றார்கள். ஆகவே குளிக்கும் திட்டத்தை கைவிட்டோம். கீழே இறங்கிப் பார்க்கலாம் என்று கார் கதவைத் திறந்தேன். கையில் ஒரு சாக்கலேட் பாதி சாப்பிட்டு விட்டு வைத்திருந்தேன். இரண்டு குரங்குகள் வந்து மிரட்டி அந்த சாக்கலேட்டைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டன. ஒன்றும் செய்ய முடியவில்லை.

அங்கிருந்து வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவிலுக்குச் சென்றோம். உள்ளே சென்று பார்க்க ஏறக்குறைய அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி உள்ளே போனோம். ஒரே ஒரு கட்டிடத்தை மட்டும் பார்க்க அனுமதித்தார்கள். நமக்கு இருக்கும் அறிவே போதும் என்று திரும்பி விட்டோம்.

இப்படியாக மூன்று நாள் வால்பாறையைப் பார்த்தோம்.


32 கருத்துகள்:

 1. டாக்டர் கந்தசாமி ஐயா! கும்பிடப் போன தெய்வம் குறிக்க வந்த மாதிரி, நீங்க வால் பாறையைப் பற்றி எழுதி உள்ளீர்கள். இது மாதிரி ஊரில் ஒரு வருடத்தில் ஆறு மாதம் to ஒன்பது மாதம் வாழலாம் என்று நானும் என் மனைவியும் நினைக்கிறோம். என் மகன் திருமணம் முடிந்த உடன், இன்னும் ஐந்து வருடத்தில் இந்தியா வரலாம் என்று நினைக்கிறேன்.

  இந்த இடம் எல்லாம் எனக்கு அத்துப் படி; எங்கள் கிராமம் பழனி - உடுமலை (கொழுமம் வழியில் உள்ளது). ஆனால், அது 25 -30 வருடத்திற்கு முன்பு. எல்லா நில புலன்ளையும் வித்து விட்டோம்! இப்போ எப்படி? நல்ல மருத்துவமனை ஒரு அரைமணி நேரப் பயணத்தில் அடையும் படி வேண்டும்...அது மாதிரி இடமா, இப்ப இந்த வால் பாறை?

  இல்லாவிடின் அது மாதிரி ஒரு நல்ல சீதோஷ்ண நிலை உள்ள ஊர் ஒன்று சொல்லுங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல சீதோஷ்ண நிலை உள்ள, மருத்துவ வசதிகள் உள்ள ஊர் என்றால் கோயமுத்தூர்தான் சரிப்படும். வால்பாறை ஒரு வாரம் மட்டும் தங்கலாம்.

   வீடு அல்லது வீடு கட்டும் இடம் எல்லாம் ராக்கெட் வேகத்தில் மேலே போய்க்கொண்டு இருக்கின்றன. ரிடயர்மென்ட் ஹோம்ஸ் என்று கம்யூனிடி லிவிங்க் என்று தனி வீடுகள் கட்டி விற்கப்படுகின்றன. 40 முதல் 50 லட்சம் வரை ஆகும். அது உங்களுக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

   நீக்கு
  2. சார்!

   ஒரு சிறு திருத்தம்!!!

   வால்பாறையில் உள்ள மருத்துவமனைகளின் தரம், நம்ம கோவை மருத்துவமனைகளின் தரத்திற்கு குறைவானது இல்லை! மேலும், எஸ்டேட் மருத்துவமனைகளும், கிறிஸ்துவ மருத்துவமனைகளும் ஏராளம்....

   அறுவைசிகிச்சைக்கு வேண்டுமானால் கோவையை நாடலாம்... மற்ற விஷயங்கள் இங்கு நிறைய இருக்கின்றன!!!

   நீக்கு
 2. அருமை. எனக்கும் இங்கே போகணும் என்ற எண்ணம் ரொம்ப நாளாவே இருக்கு. வாய்ப்புதான் கிடைக்கலை.

  ஒரு சினிமாவில் கூட இந்த ஊர் நடிச்சுருக்கே!

  பதிலளிநீக்கு
 3. சுற்றுப் பயண விபரம் மிக அருமையாக உள்ளது
  விரைவில் நானும் பார்க்க விரும்புகிறேன் நன்றி!


  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 4. வால்பாறை நாங்களும் போக எண்ணியுள்ள ஊர். தங்களின் விரிவான பகிர்வுக்கு மிக நன்றி ஐயா.

  தேயிலை தோட்டங்கள் தான் இங்கு அவசியம் காண/ மகிழ வேண்டிய இடம் என தோன்றுகிறது

  பதிலளிநீக்கு
 5. //
  வால்பாறை ஒரு சிற்றூர்///

  நகராட்சி சார்!!!! அதுவுமில்லாம சட்மன்றத் தொகுதி.....

  //விடுதிக்கு அருகாமையில் (ஐந்து கி.மீ. தூரத்தில்- காட்டுப்பாதை-போகவர 2 மணி நேரம் மட்டுமே ஆகும்) ஒரு தம்பதியினர் நடத்தும் 5 ஸ்டார் ரெஸ்டாரென்ட் ஒன்று இருக்கிறது///

  எந்த ஏரியா சார்!!! இது எனக்குப் புதுத் தகவல்......

  வால்பாறை போன, போயிப் பாக்கணும்......

  :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பர் நீரார் அணைக்குப்பக்கத்திலுள்ள கெஸ்ட் ஹவுஸ்

   நீக்கு
 6. எங்கள் ஊரில் இருந்து சிறிது பக்கம் என்பதால் 3 தடவை சென்றதுண்டு... இனிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... தொடருங்கள்... (த.ம. 3)

  பதிலளிநீக்கு
 7. புகைப்படங்களும் சுற்றுலா பற்றிய தகவல்களும் அருமை சார்.

  பதிலளிநீக்கு
 8. எங்கெல்லாமோ போய் இருக்கிறேன். வால்பாறை போனதில்லை. கொடுத்து வைத்தவர்.!

  பதிலளிநீக்கு
 9. நல்ல பயணப் பகிர்வு. நீங்கள் தங்கிய இடம் தவிர்த்து வேறு தனியார் தங்கும் வசதிகள் உள்ளனவா? செப்டம்பர் மாதத்தில் அங்கு செல்ல நினைத்திருக்கிறேன். முடிந்தால் தகவல் சொல்லுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வால்பாறை பஸ் நிலையத்திற்கு அருகிலேயே நல்ல தங்கும் லாட்ஜுகள் இருக்கின்றன. நான் ரேட் விசாரிக்கவில்லை. டூரிஸ்ட் தலம் இல்லாததினால் ரேட் அதிகம் இருக்க வாய்ப்பில்லை.

   நீக்கு
 10. கோயமுத்தூரில் இருந்து கொண்டு வால்பாறை செல்வது கனவா? வித்தியாசமாக இருக்கிறது. பயணத்தை நன்கு அனுபவித்திருக்கிறீர்கள் போல. நீங்கள் 5 ஸ்டார் ஹோட்டல் என்று சொல்வது, நிஜமான ஹோட்டலா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்துலதான இருக்கு, போய்ட்டாப் போகுதுன்னுதான எல்லோரும் நினைப்போம். அப்படித்தான் 78 வருடம் ஓடிப்போச்சு.

   குழந்தையை பொன்னே, மணியே அப்படீன்னு கொஞ்சறதில்லையா, அப்படி வச்சுக்குங்களேன். நம்ம ஸ்டேடசுக்கு டீக்கடைல சாப்பிட்டேன் அப்படீன்னா நீங்கெல்லாம் கேவலமா நெனச்சுக்க மாட்டீங்களா?

   நீக்கு
 11. கந்த சாமி ஐயா, வெளங்காதவன்™ and திண்டுக்கல் தனபாலன்
  ---------------------

  முதலில் வெளங்காதவன்™,

  வால்பாறை முழுவதும் எப்பவும் மழை என்று கேள்விப்பட்டேன்; அப்படித்தானே!
  -------------------
  திண்டுக்கல் தனபாலன்:

  சிருமாயில் மற்றும் பாச்சலூர் எப்படி?
  மழை ஆளை கொள்ளுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்பவுமே மழை எங்கயும் பெய்யாதுங்க. மழை காலத்துல மட்டும்தான் பெய்யும். நீங்க வருகிற டைமைச் சொன்னா, நாலு நாளைக்கு மழைக்கு லீவு விட்டுடலாமுங்க.உங்களுக்கு இல்லாத சலுகையா?

   நீக்கு
 12. பதில்கள்
  1. அப்படியே இன்னொரு கரெக்ஷனும் போட்டுடுங்க. மழை ஆளை கொள்ளுமா - கொல்லுமா?

   நீக்கு
 13. //நம்பள்கி said...

  கந்த சாமி ஐயா, வெளங்காதவன்™ and திண்டுக்கல் தனபாலன்
  ---------------------

  முதலில் வெளங்காதவன்™,

  வால்பாறை முழுவதும் எப்பவும் மழை என்று கேள்விப்பட்டேன்; அப்படித்தானே!////

  கந்தசாமி ஐயாவே பதில் சொல்லிட்டாரு... எனினும்,மிதமான வெப்பம், மிருதுவான குளிர், பேய் மழை என்ற சீதோஷ்ண நிலை உள்ள ஊர்....

  அதிக விலையிலான காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் இன்ன பிற வஸ்துக்கள்.... கோடைகாலத்தைக் கழிக்க ஏதுவான இடம்தான் (என்னைப் பொறுத்தவரையில்)

  பதிலளிநீக்கு
 14. ஆனைமலை 56 எஸ்டேட்டுகளின் மொத்த விலாசமே வால்பாறை எனலாம்.ஆழியார் அணைக்கட்டை மட்டுமே வைத்துக்கொண்டு பொள்ளாச்சியை எடை போடுவது மாதிரி இருக்கிறது நீங்கள் சொல்லும் சிற்றூர்:)

  சோலையார் நீர்த்தேக்கம் ஆழியாருடன் இணைகிறது என்பது புது செய்தி.

  நம்பள்கி!ஜீன் மாதம் துவங்கி கிட்டத்தட்ட செப்டம்பர்,அக்டோபர் வரை சரியான மழைக்காலம்.அக்டோபர் முதல் டிசம்பர் வரை குளிரோ குளிர்.ஜனவரி முதல் மே மாதம் வரை வெயில் காலம்.இதுவே பயணிக்க சிறந்த தருணம்.

  பதிலளிநீக்கு
 15. ராஜ நடராஜன் said...

  //.....நீங்கள் சொல்லும் சிற்றூர்.....//

  வேறு எப்படிச் சொல்லலாம்?

  பதிலளிநீக்கு
 16. பொள்ளாச்சியிலும் கோவையிலும் பணியில் இருந்தபோது வால்பாறைக்கு சென்றிருக்கிறேன். தங்கள் பதிவைப் படித்தபோது திரும்பவும் வால்பாறைக்குப் போனது போல் உணர்ந்தேன். அழகான புகைப்படங்களுடன் கூடிய அருமையான விவரிப்பு. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. Years ago(late 70's), there was plenty of Natural scenic beauty in valparai(in and around), recent visit was a disappointment to me as the entire region has become tea/coffee plantation. BTW, did you see the tunnel constructed exclusively to reroute water?. My dad was part of the project in those days. We spent a summer holiday there. Unforgettable moments!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லோயர் நீரார் அணையில் சுரங்கத்தைப் பார்த்தோம். சம்மர் காலமாக இருந்தால் ஜீப்பில் உள்ளே போய்ப்பார்க்கலாம் என்று சொன்னார்கள். மொத்தம் 8 கி.மீ. நீளமாமே? எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் உள்ளே போகமாட்டேன்.

   நீக்கு
 18. பாலாஜி கோவில் அடுத்தமுறை போக வேண்டும்

  பதிலளிநீக்கு
 19. மிக்க நன்றி ஐயா, மிக நன்றாக விளக்கியுள்ளீர்கள், கண்டிப்பாக ஒருமுறை செல்ல வேண்டும்,
  அப்போது உங்களிடம் ஆலோசனைக்கு வருவேன்,,,,

  பதிலளிநீக்கு