சனி, 28 ஜூலை, 2012

ஆண்களுக்கும் அலங்காரம் தேவையா?



“ஆள் பாதி ஆடை பாதி” என்ற பழமொழி எல்லோரும் அறிந்ததே. இந்தப் பழமொழி காலாவதி ஆகிவிட்டது. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று நன்னூல் அணிந்துரையில் படித்திருக்கிறேன். அப்படி இன்று “ஆள் பாதி அலங்காரம் பாதி” என்று சொல்லவேண்டிய நிலை உருவாகிவிட்டது.

பெண்கள் அலங்காரப் பிரியைகள் என்பது காலம் காலமாகத் தெரிந்த நடைமுறை உண்மை. முன்பு கல்யாணப் பெண்ணிற்கு அலங்காரம் செய்வார்கள். உறவுகளுக்குள்ளேயோ அல்லது தோழிகள் வட்டத்திலோ, அலங்காரம் செய்யும் திறமை சிலருக்கு இருக்கும். அவர்களைக் கொண்டு மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்வார்கள்.

அலங்காரம் என்றால் ஜடை அலங்காரம் ஒன்றுதான் பிரதானமாய் இருக்கும். பூக்காரர் ஜடை அலங்காரத்திற்கு என்று ஸ்பெஷலாய் ஒரு பூக்கோர்வை கொண்டு வந்திருப்பார். அதை ஜடையில் வைத்து கட்டிவிட்டால் கூந்தல் அலங்காரம் முடிந்தது. பிறகு நெற்றிச்சுட்டி, ஜடை பில்லை, மற்ற நகைகளைப் போட்டுவிட்டால் மணப்பெண் அலங்காரம் முடிந்து விடும்.

கல்யாணத்திற்கு வரும் பெண்கள் இருப்பதில் ஒரு நல்ல சீலையைக் கட்டிக்கொண்டு கொஞ்சம் தலைக்குப் பூ வைத்துக்கொண்டு வருவார்கள். ஆண்கள் பெரும்பாலும் வீட்டில் துவைத்த வேட்டியைக் கட்டிக்கொண்டு தோளில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு வருவார்கள். மேல் சட்டை போடுபவர்கள் மிகக் குறைவு.

காலம் மாறிக்கொண்டு வருகிறது. மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய தொழில்முறை அலங்காரிகள் தோன்றி பல ஆண்டுகள் ஆகின்றன. இப்போது கல்யாணப் பெண்ணின் தாயார் கூட அலங்காரம் செய்து கொள்கிறாள். சில சமயங்களில் மணப்பெண் யார், மணப்பெண்ணின் தாயார் யார் என்ற சந்தேகம் கூட வந்து விடுகிறது. மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் நெருங்கிய உறவினர்களும், தோழிகளும் கூட அலங்காரம் செய்து கொண்டுதான் கல்யாணத்திற்கு வருகிறார்கள்.

சுப விசேஷங்கள் நடக்கும் இடங்களுக்கு தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வரக்கூடாது என்பது சம்பிரதாயம். அந்த சம்பிரதாயங்கள் எல்லாம் காற்றோடு போய் வெகு காலம் ஆகிவிட்டது. தலையை விரித்துப் போடுவதுதான் இன்றைய நாகரிகம். மணப்பெண்ணே கூட அப்படித்தான் அலங்காரம் செய்து கொள்கிறாள்.

இத்துடன் இந்தக் கூத்து முடிந்தால் பரவாயில்லை என்று சமாதானமடைந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் துக்க வீட்டிற்கு வருபவர்கள் வரும் கோலத்தைப் பார்த்தால் வயித்தெரிச்சல்தான் வரும். பழைய காலத்தில் துக்க சேதி கேட்டால் கட்டியிருக்கும் புடவையுடன் பெண்கள் வந்து விடுவார்கள். நெற்றியில் இட்டிருக்கும் குங்குமத்தை அழித்து விடுவார்கள். இன்று துக்க வீட்டில் இருப்பவர்களைப் பார்த்தால் அவர்கள் துக்கம் விசாரிக்க வந்திருக்கிறார்களா அல்லது ஏதாவது கல்யாணத்திற்குப் போய்விட்டு அப்படியே வந்து விட்டார்களா என்ற சந்தேகம் நிச்சயமாய்த் தோன்றும்.

பெண்களை விட்டு விடுவோம். இந்த ஆண்கள் பண்ணும் அலம்பல்கள் இருக்கிறதே அதை நேரில் பார்த்தால்தான் நம்புவீர்கள். துவைத்த வேஷ்டி சட்டையோடு கல்யாணத்திற்கு வந்த காலம் மலையேறிப்போய்விட்டது. அப்படி யாராவது கல்யாணத்திற்கு வந்தால் அவர்களை சமையல்காரன் என்று கருதி பின் வாசலுக்குப் போகச் சொல்லுவார்கள். “ராம்ராஜ்” காரன் வேஷ்டி சட்டை கொண்டு வந்தாலும் வந்தான், ஜனங்கள் முழுவதுமாக மாறிப்போய் விட்டார்கள்.

கல்யாண வீட்டிற்கு வரும் பெரும்பாலானோர் வெள்ளை வேட்டி சட்டைதான் போட்டுக்கொண்டு வருகிறார்கள். தலைக்கு (கூடவே மீசைக்கும்) டை அடிக்கத் தவறுவதில்லை. வேஷ்டி, சட்டை கஞ்சி போட்டு இஸ்திரி போட்டிருக்கவேண்டும் என்பது எழுதாத சட்டம். சாதாரண சட்டை வேட்டி போட்டுக்கொண்டு போகிறவர்களுக்கு யாரும் ஒன்றும் சொல்லவில்லை என்றாலும் அவர்களுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடும்.
இப்போது என்ன நடக்கிறதென்றால் துக்க வீட்டுகளுக்கும் இதே மாதிரிதான் உடை உடுத்துகிறார்கள். அங்கும் இதே ராம்ராஜ் வேட்டி, சட்டைதான். என்ன வித்தியாசம் என்றால் மேக்கப் கொஞ்சம் குறைவாக இருக்கும்.

ஆண்களுக்கும் மேக்கப் போட கடைகள் வந்துவிட்டன என்ற விபரம் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்னும் ஐந்து வருடங்களில் கல்யாணத்திற்குப் போகிறவர்களும் துக்கத்திற்குப் போகிறவர்களும் இந்த அலங்கார நிலையங்களுக்குப் போய்விட்டுத்தான் போவார்கள்.

இந்த மேக்கப் தொழிலுக்கு நல்ல வளமான எதிர்காலம் இருக்கிறபடியால் உங்கள் வாரிசுகளை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை அமையும். கார், பங்களா என்று வசதியாக வாழலாம்.

22 கருத்துகள்:

  1. பல ஆண்கள் பெண்கள் செய்வது போல ப்ளீச்சிங் செய்வது உண்டு.

    பதிலளிநீக்கு
  2. வெளி ஒப்பனை மட்டும்தான் மதிப்பு கொடுக்கிறது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அது ரொம்ப நாள் நீடிக்காது என்று யார்க்கும் தெரிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி ஒப்பனை ஒருவரைப்பற்றிய பல விஷயங்களைக் காட்டுவதால் அதை எல்லோரும் கடைப்பிடிக்கிறார்கள்.

      நீக்கு
  3. இந்த மேக்கப் தொழிலுக்கு நல்ல வளமான எதிர்காலம் இருக்கிறபடியால் உங்கள் வாரிசுகளை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கை அமையும். கார், பங்களா என்று வசதியாக வாழலாம்//.

    நீங்கள் சொல்வதும் சரிதான்
    இப்போதே தெருவுக்கு தெரு
    அலங்காரக் கடைகள் வந்துவிட்டதே
    யதார்த்த நிலையை விளக்கிப்போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அலங்காரம் என்றால் ஜடை அலங்காரம் ஒன்றுதான் பிரதானமாய் இருக்கும். பூக்காரர் ஜடை அலங்காரத்திற்கு என்று ஸ்பெஷலாய் ஒரு பூக்கோர்வை கொண்டு வந்திருப்பார். அதை ஜடையில் வைத்து கட்டிவிட்டால் கூந்தல் அலங்காரம் முடிந்தது. பிறகு நெற்றிச்சுட்டி, ஜடை பில்லை, மற்ற நகைகளைப் போட்டுவிட்டால் மணப்பெண் அலங்காரம் முடிந்து விடும்.//

    கிராமங்கஇல் இன்றும் இந்த அலங்காரம் தான்.
    எந்த காலம் என்றாலும் பழமையை விரும்புபவர்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
  5. ஆண்களுக்கும் மேக்கப் போட கடைகள் வந்துவிட்டன

    எங்கள் இல்லத்தில் ஆண்கள்தான் அலங்கரித்துக் கொள்ள நிறைய நேரம் செலவழித்து பொறுமையைச் சோதிப்பார்கள்..

    அழகுநிலையம் சென்று அரைநாள் செலவழிப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  6. இம்புட்டு கோவமா ... இதுக்கெல்லாம்.

    வயசுப் பிள்ளைக... அவுக இஷத்துக்கு பண்ணிட்டு போகட்டுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யய்யோ. இதுல கோபம் இல்லீங்க. சமீபத்துல ஒரு துக்க வீட்டுக்குப் போக வேண்டி வந்தது. கொஞ்சம் பெரிய இடம். நானே (ஏஏஏஏஏ) ஒரு சலவை சட்டையும் வேட்டியும் உடுத்திக்கொண்டுதான் சென்றேன். அப்படி செல்லாவிட்டால் நம்மை சரியாக மதிக்க மாட்டார்களோ என்ற தாழ்வு மனப்பான்மைதான். ஏனென்றால் நிர்வாணபுரியில் கோவணம் கட்டியவன் பைத்தியக்கார்ன் என்று பட்டம் சூட்டும் உலகம் இது. இதுதான் இன்றைய நிஜம்.

      நாமும் அதற்கு ஈடு கொடுத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. மனிதனுக்கு என்று தனி மதிப்பு இன்றைய உலகில் இல்லை என்பது என் கருத்து. அவனுடைய செல்வத்தை வைத்துத்தான் அவனை மதிக்கிறார்கள்.

      நீக்கு
  7. நல்ல அவதானிப்பு, சில மண வீடுகளில் அலங்காரத்தின் பின் பெண் இருந்ததும் இழந்தது போலிருக்கும்.
    ஆண்கள் சிலரின் கூத்துக்கள் அதிகமே!
    ஆனால் இவைதான் இனிமேல்...சகிக்கவேண்டியதே!

    பதிலளிநீக்கு
  8. அருமையான படைப்பு தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அதிலும் இப்போது வெளிநாடுகளில் நடக்கும் கூத்தையும் பார்த்தால் பழைய கலாச்சாரத்திற்கும் எம் மக்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது .அவசரத்திற்கு காதில போடும் தோடு கூட மகனிடம் அம்மா வாங்கலாம்!..அலங்காராத்துக்கு செலவு செய்யும் பணம் ஒரு பெண்ணுக்கு சீதனமே
    கொடுத்து விட காணும் .ஆதலால் நீங்கள் சொல்வது போல் இனி வரும் காலத்தில் இந்தத் தொழில் செய்தால் அதிக வருமானம் வரும்!..........:)
    மிக்க நன்றி ஐயா பயனுள்ள சிறப்பான ஆக்கத்திற்கு .

    பதிலளிநீக்கு
  9. சொல்லப் போனால் மனிதனுக்கு ஆடையே அலங்காரம் தான் . வெறும் பாலுறுப்புக்களை பாதுகாக்கவே ( விலங்குகள் தாக்காமல் இருக்கவும், காயங்கள் ஏற்படாமல் இருகக்வும் ) ஆடை அணிய ஆரம்பித்தான் மனிதன் .. பின்னர் குளிர்ந்த இடங்களுக்கு புலம்பெயரத் தொடங்கிய பின்னர் போர்த்துக் கொள்ள ஆரம்பித்தான் .. ஆனால் அது வேட்டி, சேலைகளாக இன்ன பிறவைகளாக மாறியதே அலங்கார பரிணாமம் தான் ... !!! பின்னர் அது எங்கோ எங்கோ போய் இங்கு வந்து நிற்கின்றது ...

    அலங்காரங்கள் ஓரளவு தேவையே ! அது தன்னம்பிக்கையை வள்ர்ப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன .. ஆனால் பூமிக்கு டோட்டல் டாமஜ் செய்துவிட்டு தன்னம்பிக்கையை மட்டும் வளர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை ...

    பதிலளிநீக்கு
  10. ம்ம்ம்ம் - ஆதங்கம் புரிகிறது அய்யா - காலம் மாறுகிறது - நாமும் மாற வேண்டியதுதான் - உலகுடன் ஒத்துப் போவோம் - ம்ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய இந்த வாரப் பதிவுகள் அனைத்தையும் இன்று படித்து விட்டீர்கள் போலத் தெரிகிறது. நன்றி ஐயா.

      நீக்கு
  11. ஐயா,

    ஃபிஜி தீவுகளுக்குக் குப்பை கொட்டப்போன புதிதில் சாவு வீட்டுக்கு வரும் பெண்கள் அலங்காரம் கண்டு பிரமித்துப்போனேன். துக்க வீடாச்சேன்னு நான் கருப்புப்புடவை கட்டிக்கிட்டு போயிருந்தேன்.

    இங்கே நியூஸியிலும் சவ அடக்கத்தன்று எல்லோரும் படு ஸ்மார்ட் அண்ட் நீட்டா கோட் ஸூட் போட்டுக்கிட்டு வருவாங்க. அப்படி வருவதுதான் இறந்தவர்க்குச் செய்யும் மரியாதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை, துளசி கோபால் அவர்களே. யோசித்துப் பாரத்தால் நாம் உடை உடுத்துவதும் அலங்காரம் செய்து கொளவதும் நம்மைப் பார்ப்பவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை என்றுதான் கொள்ளவேண்டும். நம்மைப் பார்ப்பவர்கள் முகம் சுளிக்காதவாறு நாம் திருத்தமாக இருக்கவேண்டியது நமது கடமை.

      ஆகவே துக்கவீட்டிற்கு திருத்தமாக உடை அணிந்து செல்வது இறந்தவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

      இதே காரணத்திற்காக நாம் வீட்டில் இருக்கும்போதும் நல்ல உடையுடனும் தேவையான அலங்காரத்துடனும் இருப்பது நமது வீட்டிலுள்ளவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும். மற்வர்களுக்கு கொடுக்கும் மரியாதையை மனைவிக்கோ, கணவனுக்கோ கொடுப்பதில் ஏன் தயங்கவேண்டும்?

      நீக்கு
  12. உண்மை!

    எங்க சித்தப்பா ஒருத்தர் இப்படித்தான் சொல்வார் சித்தியிடம். வெளியே போகணுமுன்னடுனே வீட்டுச்சாவியை எடுத்துக்கிட்டுக் கதவைப்பூட்டணுமாம். அந்த அளவுக்குக் காலையில் குளிச்சு முடிச்சதும் நல்ல உடை உடுத்தி இருக்கணும் என்று சொல்வாராம்.

    நியூஸியில் இப்படித்தான் இருக்கேன் பெரும்பாலும். குளிர்காலம் தவிர:(

    பதிலளிநீக்கு
  13. எருமைமாட்டுக்கு எத்தனை தடவை ப்ளீச் பண்ணினாலும் பசுமாடு ஆகமுடியுமா?? தலைவிரி கோலம் இப்ப ரொம்ப ஜாஸ்தி ஆகிக் கொண்டு வருகிறது! :(

    பதிலளிநீக்கு
  14. "நல்ல வளமான எதிர்காலம்" ஆம்.

    இங்குதான் அள்ளுப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.இதனால் பல இடங்களில் முன்பதிவு செய்து கொள்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  15. உண்மைதான்! இப்பொது பல விசேச வீடுகளில் இந்த கூத்து நடந்தேறி வருவது கண்கூடு! என்ன செய்வது கால மாற்றத்தில் இதுவும் ஒன்று!

    பதிலளிநீக்கு