புதன், 15 ஆகஸ்ட், 2012

அம்மன் அருளால் ஈமு பிரச்சினை தீர்ந்தது!

(படம் சும்மானாச்சுக்கும்)
ஈமு பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு வருவதை எல்லோரும் செய்தித் தாள்களில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்தப் பிரச்சினை வெடித்த நாளில் இருந்து நான் தூங்குவதேயில்லை. கணைண மூடினால் ஈமு கோழிகள் என்னைக் கொத்த வருவது போலவே காட்சிகள் வருகின்றன.

ஈமு கோழிகள் கொத்தினால் கொத்தின இடத்திலுள்ள எலும்புகள் பொடிப்பொடியாக ஆகிவிடும் என்கிறார்கள். அப்புறம் அந்த எலும்புத் தூள்களை பயிர்களுக்கு உரமாகப் போடத்தான் லாயக்காம். எலும்புத்தூள் நல்ல இயற்கை உரமாகும். பாஸ்பரஸ் சத்தை பயிர்களுக்குக் கொடுக்கும். எனக்கு என் எலும்புகளை இயற்கை உரமாக்கும் ஆவல் தற்சமயம் இல்லாததால் நான் தூங்குவதில்லை.

விழித்திருக்கும்போது கூட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஈமுக்கோழிகளும் தீனி எங்கே, தீனி எங்கே என்று கேட்கிற மாதிரியே காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. காது-மூக்கு-தொண்டை வைத்தியரிடம் போனேன். அவர், உங்களுக்கு வயசாயிடுச்சு அல்லவா, அதனால இப்படித்தான் காதில் ஏதாவது கேட்டுக்கொண்டே இருக்கும் என்றார். டாக்டர், அண்ணைக்கு எனக்கு காது ஏறக்குறைய டமாரமாகி விட்டது என்று சொன்னீர்களே, இது மட்டும் எப்படி கேட்குது, டாக்டர் என்று கேட்டேன். டமாரமான காதில் ஏதோ கேட்கிறதல்லவா, சந்தோஷப் படுங்கள் என்று சொல்லி தன் பீஸை வாங்கிக்கொண்டு என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்.

அப்புறம் நான் வழக்கமாக செய்யும் யோக நித்திரையில் இருக்கும்போது ஒரு பொறி தட்டியது. அது என்னவென்றால், இப்போது ரம்ஜான் காலமல்லவா, ரம்ஜான் தினத்தன்று நம் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் அசைவ விருந்து தயாரித்து தாங்களும் உண்டு, மற்றவர்களுக்கும் கொடுப்பார்களல்லவா? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஈமு பிரச்சினையை தீர்த்து விடலாமேயென்று தோன்றியது.

ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், அந்த திட்டத்தை அம்மாவிடம் தகுந்த நேரத்தில் எடுத்துச் சொன்னால், அவர்களுடைய விலையில்லாத் திட்டத்தில் இதையும் சேர்த்துக்கொளவார்களே என்று தோன்றியது. திட்டம் என்னவென்றால், ரம்ஜான் தினத்திற்கு முந்தின நாள், ஈமு கோழி வைத்திருப்பவர்கள் எல்லாம் தங்கள் கோழிகளை அருகில் உள்ள இஸ்லாமிய தொழுகைத் தலங்களுக்கு கொண்டுபோய் கேட்பவர்களுக்கு விலையில்லாமல் கொடுத்துவிடவேண்டியது.

அப்படியே கையோடு அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தாங்கள் இவ்வளவு கோழிகளைக் கொடுத்திருக்கிறோம் என்று எழுதிக்கொடுத்து விட்டு வந்து விடவேண்டியது. ஒரு வாரத்தில் கோழிகளின் விலை அவரவர்களுக்கு மணிஆர்டர் மூலம் வீட்டுக்கு வந்து சேரும்.

அம்மன் அருள் இருந்தால் எதுவும் நடக்கும்.

8 கருத்துகள்:

  1. ஆஹா... நல்லதொரு யோசனையா இருக்கே ஐயா... நன்றி...

    இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...(TM 2)

    பதிலளிநீக்கு
  2. //ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால்//

    ஈமு ஹலால்னா சரி, ஹராமாப் போச்சுன்னா?

    பதிலளிநீக்கு
  3. இந்த ஈமு கோழிப் பிரச்சனை உங்களை வெகுவாக பாதித்துவிட்டது தெரிகிறது. அம்மா அருளாலொ அம்மன் அருளாலோ தீர்ந்தால் சரி.!

    பதிலளிநீக்கு
  4. கனவில் வந்து ஈமு கோழிகள் 'மாமு மாமு' என்று அழைக்கிறதோ.....!!!

    பதிலளிநீக்கு
  5. ஈமு பிரச்சனையை சுலபமாக தீர்த்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
  6. ஆகா! ஈமு தப்பித்தது.

    இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. பரவாயில்லை... பிரச்சினைக்கு சுலபமான தீர்வை கண்டு சொல்லியிருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு