வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய பிரபஞ்ச ரகசியம்


அதென்ன பெரிய சிதம்பர ரகசியமா? என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். சிதம்பரம் கோவிலில் சிதம்பர ரகசியம் காட்டுகிறேன் என்று சிவாச்சாரியார் உங்களிடம் சொன்னால் நூறு ரூபாய் அவுட் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அவர் உங்களைக் கூட்டிக்கொண்டுபோய் ஒரு திரையை விலக்கி ஒரு அறையைக் காட்டுவார்.

"சிதம்பர ரகசியம் பாருங்கோ" என்று கூவுவார். அந்த அறையில் மேற்கூரை இல்லை. ஆகாயம்தான் தெரியும்.  கூடவந்த அனைவரும் கும்பிடுவதைப் பார்த்து நீங்களும் அப்படியே கும்பிட்டு விட்டு ஒன்றும் புரியாமல் வந்து விடுவீர்கள். இது என்ன ரகசியம் என்று கேட்டு உங்கள் அறியாமையை வெளியில் காட்ட வெட்கம். அதனால் பேசாமல் ஊருக்கு வந்து விடுவீர்கள்.

அது ஒண்ணும் ரகசியமே அல்ல. சிதம்பரம் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம். அதாவது சிவன் ஆகாயமாக இருக்கிறான் என்பது ஐதீகம். அதைக் காட்டுமுகமாகத்தான் வெற்றறையைக் காண்பிக்கிறார்கள்.

அது போல பிரபஞ்ச ரகசியம் என்று ஒன்றும் இல்லை. பெரிய உண்மைகளை ரகசியம் என்று கூறுவது மரபு. பிரபஞ்சம் என்றால் என்ன என்று பார்ப்போம்.

எந்த தத்துவம் அல்லது பிரச்சினையானாலும் அதைப் புரிந்து கொள்ள தெளிவான சிந்தனை இருக்கவேண்டியது அவசியம். அதற்கு அந்தப் பிச்சினையை அல்லது தத்துவத்தை எளிமைப் படுத்தி, பிறகு அணுக வேண்டும். எடுத்தவுடன் முழுமையாகப் புரிந்து கொள்ள முயன்றால் சிந்தனைக் குழப்பம்தான் ஏற்படும்.

இரண்டாவது, நமக்குத் தெரிந்ததை வைத்துத்தான் தெரியாததைப் புரிந்து கொள்ள முடியும். நான்கு குருடர்கள் யானையைப் பார்த்த கதை எல்லோருக்கும் தெரியுமல்லவா? இதை வைத்து முதலில் இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது, எப்படி உண்டாகியது என்ற இரண்டு சமாசாரங்களை மட்டும் சிந்திப்போம்.

நம் பூமி இருப்பது சூரிய மண்டலம். அதாவது சூரியனை மையமாகக் கொண்டு
பல கிரகங்களும் உப கிரகங்களும் இருப்பது சூரிய மண்டலம். சூரியன் ஒரு நட்சத்திரம் என்று வானவியலில் கூறப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தில் இதுபோல் ஆயிரக்கணக்கான (இன்னும் முழுதாக கணக்கு எடுத்து முடியவில்லை) நட்சத்திரங்கள் இருப்பதாக வானவியலார் சொல்கிறார்கள்.

நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி புறப்பட்டதிலிருந்து பூமிக்கு வந்து சேர 4.2 ஒளி ஆண்டுகள் ஆகிறதாம். அதாவது ஒளியின் வேகம், விநாடிக்கு 1,86,000 மைல். ஏறக்குறைய மூன்று லட்சம் கி.மீ.  பூமியின் சுற்றளவே சுமார் 36000 கி.மீ. தான்.

முதலில் இதைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒளி ஒரு செகன்ட்டில் மூன்று லட்சம் கி.மீ. செல்லும். 4.2 வருடங்களுக்கு எவ்வளவு செகன்ட்டுகள். அவ்வளவு செகட்ன்டுகளை மூன்று லட்சத்தினால் பெருக்கினால் எவ்வளவு வருகிறது என்று மனதால் யோசிக்க முடியாது. கம்ப்யூட்டரில் வேண்டுமானால் போடலாம். அப்படிப்போட்டதில் வந்த விடை - மூன்று கோடி லட்சம் கி.மீ. இதை கற்பனை செய்து பார்ப்பதே கடினம்.

ஒருக்கால் நாம் அந்த நட்சத்திரத்திற்குப் போக முடிந்து, அங்கிருந்து அதே திசையில் பார்த்தால் அங்கும் ஒரு நட்சத்திரம் இருக்கும். அது எவ்வளவு தூரத்தில் இருக்கும்? இப்படியே கற்பனை செய்து பாருங்கள். பிரபஞ்சத்தில் இப்படி கோடானுகோடி நட்சத்திரங்கள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். அப்போது இந்தப் பிரபஞ்சம் எவ்வளவு தூரம் வியாபித்திருக்கும்?

 இது எங்கு முடியும்? அப்படி முடிந்தால் அதற்கு அப்பால் என்ன இருக்கும்? இது ஒரு முடிவில்லாத கற்பனை. ஆகவே பிரபஞ்சம் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு பெரிதானது என்பது புரிந்தால், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்குப் போதும்.

அடுத்த கேள்வி: இதை யார் உண்டு பண்ணினார்கள்? கேள்வி என்னமோ ரொம்ப லாஜிக்கலாத்தான் இருக்கிகிறது. ஆனால் பதில் சொல்வது அவரவர்கள் கற்பனைக்குத் தக்கபடி இருக்கும். நாம் வாழும் உலகில் நடைமுறையில் பல செயல்களைக் காண்கின்றோம். அவை எப்படி  ஏற்படுகின்றன என்று கண்டு, கேட்டு, விசாரித்து அறிந்திருக்கிறோம். அதன்படி ஒரு பொருள் இருந்தால் அதற்கு ஒரு உற்பத்தியாளனும்/படைப்பாளியும் இருக்கவேண்டும் என்று நம்புகிறோம். நண்பர் ஜெயதேவ் தாஸ் சொல்வது போல், ஒரு சட்டி இருந்தால் அதைச் செய்த குயவனும் இருந்தே ஆகவேண்டும். இட்டிலி இருந்தால் அதைச் சுட்டவர் இருந்தே ஆகவேண்டும்.

இந்த லாஜிக் பிரகாரம் எந்தப் பொருளும் ஒரு படைப்பவன் இல்லாமல் உண்டாவதில்லை. ஆகவே இந்தப் பிரபஞ்சமும் யாரோ ஒருவனால்தான் படைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த விவாதத்தில் ஏதாவது தவறு தெரிகிறதா? இல்லையல்லவா?

இங்குதான் கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பாளி யார்? இதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அப்படி ஒரு படைப்பாளி இருந்தால், அவர் எதைக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார்? குயவன் சட்டியை உருவாக்கினான் என்றால் அவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறான் என்ற அறிவோம். இந்த லாஜிக் பிரகாரம் எப்படி குயவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறானோ அப்படி இந்தப் பிரபஞ்சத்தை அந்தப் பெயர் தெரியாத ஆள் எதை வைத்து படைத்தார்?

அப்படி ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன்பு என்ன இருந்தது? அந்தப் படைப்பாளி எங்கிருந்து உற்பத்தியானார்?

எனக்கே தலை சுற்றுகிறது. ஆகவே இது போன்று, "சிந்தனையாளர்களுக்கு" என்று வரும் பதிவுகளைப் படிக்காதீர்கள். கீழ்ப்பாக்கத்தில் நிறைய சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். இந்த சிந்திக்கும் வேலையை அவர்களுக்கு விட்டுவிடுங்கள். அவர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சிந்தித்து பதில் சொல்வார்கள்.அது வரையில் நாம் காத்திருப்போம்.

30 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா தங்களது ஆக்கம் மிகவும் சுவாரசியமாக
  இருந்தது தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. பைத்தியம் முத்தித்தான் நீங்கும். அது போலத்தான் தலைச்சுற்றலும் :)

   நீக்கு
 3. உங்கள் பாணியில் சொல்லி அழகாக விளக்கி விட்டீர்கள் ஐயா... நன்றி... (TM 4)

  பதிலளிநீக்கு
 4. அதன்படி ஒரு பொருள் இருந்தால் அதற்கு ஒரு உற்பத்தியாளனும்/படைப்பாளியும் இருக்கவேண்டும் என்று நம்புகிறோம். நண்பர் ஜெயதேவ் தாஸ் சொல்வது போல், ஒரு சட்டி இருந்தால் அதைச் செய்த குயவனும் இருந்தே ஆகவேண்டும். இட்டிலி இருந்தால் அதைச் சுட்டவர் இருந்தே ஆகவேண்டும்.//

  அருமையான, எளிதான எடுத்துக்காட்டு.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. இவை எல்லாமே மானிடத்தன்மை கொண்ட சித்தாந்தங்கள். தெய்வத்தை மனித ரூபமாக பார்ப்பதும் மனித சித்தாந்தம். நம் கற்பனைக்கும் ஒரு எல்லை இருக்கிறது! ஒரு மகா வெடிப்பில் அண்டம் உருவானது என்றதால் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ள உஷ்ணத்தை ஒரு ரேடியோ டெலஸ்கோப் மூலம் 1965 இல் Arno Penzias, Robert Wilson என்ற இரண்டு அமெரிக்கர்கள் கண்டு பிடித்து நோபல் பரிசு வாங்கியதையும், இந்த Big bang குக்கு முன் என்ன இருந்தது என்று கேட்கக் கூடாது, ஒன்றுமில்லை, Nothing! ஆதியாரம்பக் கருவாக இருந்தது என்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் நடந்த மகா சம்போகத்திலிருந்து பிரஜாபதி என்றெல்லாம்.... இன்னும் இன்னும்..

  எழுதியிருப்பவர் சுஜாதா! 88 இல் தினமணியில் 'மூவகை சிருஷ்டி தத்துவங்கள்' என்ற தலைப்பில் இதே விஷயத்தை எழுதியிருக்கிறார். படித்திருக்கிறீர்களோ?

  பதிலளிநீக்கு
 6. // மூன்று கோடி லட்சம் கி.மீ. இதை கற்பனை செய்து பார்ப்பதே கடினம்.//

  ஸ்பெக்டரம் ஊழல்கள் செய்திகளை எல்லாம் படித்து மனனம் செய்த பிறகுமா ? இந்தக் கணக்கெல்லாம் கடினமாக தெரிகிறது ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த விஷயத்தை எல்லாம், ஏதோ பெரியவங்க சாமாசாரம்னு கிட்டவே போறதில்லீங்க. நமக்கு ஒரு லட்சம்தான் டார்கெட்டு. அதுக்கு மேல போனா தகராறுதான். அதுக்கு மேல போனதும் இல்லை. ஆமாங்க, ஒரு லட்சத்திற்கு எத்தனை சைபர் போடோணுமுங்க?

   நீக்கு
 7. //அப்படி ஒருவர் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன்பு என்ன இருந்தது? அந்தப் படைப்பாளி எங்கிருந்து உற்பத்தியானார்?//

  மதவாதிகள் தான் உற்பத்தி செய்ததனர், பழியை படைப்பாளி மீது போடுகின்றனர்.

  பதிலளிநீக்கு
 8. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இந்த மாதிரியெல்லாம் எப்படி சிந்தித்து எழுதுகிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது வந்து தம்பி, கோவையில ஒரு ஸ்பெஷல் லாட்ஜ் இருக்குது. அங்க ரூம் போட்டுத்தான் யோசிச்சு இப்படி சிந்தனை கிளை கிளையாப் பிரிஞ்சு வேலை செய்யுது. கோவைக்கு வாங்க, உங்களுக்கு அந்த டெக்னிக்கை சொல்லிக் கொடுக்கிறேன்.

   நீக்கு
 9. குழப்பத்தில் ஆழ்த்தும் விசயத்தை, நன்கு புரியும் வகையில் எளிமைப் படுத்தியிருக்கிறீர்கள்.

  நன்றி.

  கீழ்ப்பாக்கத்தில் நிறையச் சிந்தனையாளர்கள் இருப்பதாக நகைச் சுவையுணர்வுடன் குறிப்பிட்டிருக்கிறீர்கள்

  அண்மையில், ‘சிந்தனையாளர்களுக்குச் சில கேள்விகள்” என்று பதிவு போட்ட நானும் கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவன்தான்!!! அடுத்து, ‘சிந்தனையாளர்களுக்கு’ என்ன எழுதி அவர்களை ‘ஒரு வழி’ பண்ணலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

  சரியான தருணத்தில் பதிவுலக நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

  நகைச்சுவையாக [உண்மையும் உள்ளதோ?] ஒரு பதிவு போட்டு அனைவரையும் மகிழச் செய்தீர்கள்.

  மிக்க நன்றி ஐயா. [நானும் வயதானவன்தான்]

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என்னை விட ஐந்து வயது குறைவு என்று நீங்கள் எழுதிய நினைவு.

   நிற்க, உங்கள் பதிவுதான் என்னை இந்தப் பதிவு எழுதக் காரணமாக இருந்தது. உங்கள் பதிவு உள்வாங்க கடினமாக இருந்ததால் ஒரு எளிமையான பதிவு போடலாமே என்று சிந்தித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு.

   கீழ்ப்பாக்கம் சமாசாரம் கொங்கு குசும்பின் தாக்கம். உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.

   நீக்கு
 10. //உங்கள் பதிவுதான் என்னை இந்தப் பதிவு எழுதக் காரணமாக இருந்தது. உங்கள் பதிவு உள் வாங்கக் கடினமாக இருந்ததால், ஒரு எளிமையான பதிவு போடலாமே என்று சிந்தித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு//

  ஐயா, இதைவிட யாரும் எந்த வகையிலும் என்னைப் பெருமைப் படுத்த முடியாது. இனி என்னைக் குறை சொல்லியோ பழித்தோ நீங்கள் எழுதினாலும் உங்களிடத்தில் நன்றி உள்ளவனாகத்தான் இருப்பேன்.

  கொங்கு நாட்டுக் குசும்பு பிறரை இன்புறுத்தத்தான் செய்யும்; துன்புறுத்தாது; வருத்தாது. நானும் கொங்கு நாட்டவன்தானே.

  நன்றி.

  இது உண்மையான, மனப்பூர்வ நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 11. அருமையான பகிர்வு. சிதம்பர ரகசியம் தெரிந்து கொண்டோம்....

  பதிலளிநீக்கு
 12. ஐயா !
  இந்தச் சிதம்பர ரகசியம் இவ்வளவுதானா?
  அடுத்து நீங்கள் கூறிய விடயங்கள் பற்றி ,நான் என் "களிமண்ணுக்கு" எந்த வேலையும் கொடுப்பதில்லை.

  பதிலளிநீக்கு
 13. நம்மை நாமே யார் என்று அறிந்து கொள்வோம். பிறகு பிரபஞ்சம் பற்றி சிந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. ///அதென்ன பெரிய சிதம்பர ரகசியமா? என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். சிதம்பரம் கோவிலில் சிதம்பர ரகசியம் காட்டுகிறேன் என்று சிவாச்சாரியார் உங்களிடம் சொன்னால் நூறு ரூபாய் அவுட் என்று நினைத்துக்கொள்ளுங்கள். ///

  சிவாச்சாரியார்--என் மனது புன்படுது!

  பதிலளிநீக்கு
 15. ///கோமதி அரசு17 August 2012 6:27 AM

  அதன்படி ஒரு பொருள் இருந்தால் அதற்கு ஒரு உற்பத்தியாளனும்/படைப்பாளியும் இருக்கவேண்டும் என்று நம்புகிறோம். நண்பர் ஜெயதேவ் தாஸ் சொல்வது போல், ஒரு சட்டி இருந்தால் அதைச் செய்த குயவனும் இருந்தே ஆகவேண்டும். இட்டிலி இருந்தால் அதைச் சுட்டவர் இருந்தே ஆகவேண்டும்.//

  அருமையான, எளிதான எடுத்துக்காட்டு.
  நன்றி.///

  மேற்குறிப்பிட்ட "தாசின் எடுத்துக் காட்டுக்கு ஒருவர் அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்."

  அதன் லிங்க்:

  http://anjjamvakuppu.blogspot.com/2012_02_01_archive.html

  தலைப்பு : படைப்பு.....ரஜினிகாந்த்...!

  இந்த இடுகையில், அந்த பதிவர் ஆறாவது வரியில் அழகாக ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்..அதை எல்லோரும் பார்க்கவேண்டும்!

  ஒவ்வொரு ஆன்மீக வாதியும் அவசியம் முழுவதும் படிக்க வேண்டும்.  http://anjjamvakuppu.blogspot.com/2012_02_01_archive.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஏனென்றால் இறைவன் என்பது மனிதர்களின் கற்பனை. இறைவன் என்று ஒருவன் எப்போதும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை, இனிமேலும் வரப்போவதுமில்லை.//

   பார்த்தேன். ரசித்தேன்.

   நீக்கு
 16. எளிமையான அருமையான விளக்கம்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  திருப்பாலீஸா! திருவருள் தருவாய்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_17.html
  குடிபெயர்ந்த கிராமமும் குளித்த டாக்டரும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4286.html
  பதிலளிநீக்கு
 17. தங்கள் நடையே தனி.இந்த சிதம்பர இரகசியத்துக்கு இதுதான்பொருளா?ஃஃஇது சூப்பரா புரியுது.கீழ வரவரத்தான் கலைக்கு மேல குருவி சுத்துது.பெரிய மனுசன் சார்.வாழ்த்துக்கள் சொந்தமே!

  இன்னும் சொல்லுவேன் சத்தமாய்! ..!!!!


  பதிலளிநீக்கு
 18. http://www.whatthebleep.com/trailer/drh-trailer.shtml
  நாம் பார்க்கும் , உணரும் உலகத்தில்தான் லாஜிக் எல்லாம் போல. இந்த தளத்தில் உள்ள double slit experiment காணொளியை சற்று பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 19. http://youtu.be/DfPeprQ7oGc
  இங்கேயும் அந்த காணொளியைக் காணலாம்!

  பதிலளிநீக்கு
 20. \\இங்குதான் கருத்து வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. அப்படியானால் அந்தப் படைப்பாளி யார்? இதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.\\

  தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் புவியைத் தோண்டும் போது சில கூரான கற்களை எடுக்கிறார்கள், நன்றாகக் கவனியுங்கள் ஒரு கூரான கல்..... அதில் என்ன பெரிய தொழில் நுட்பம் இருக்கிறது, அதுமட்டுமல்ல அது தானாக உருவாவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கிறது. ஆனாலும் அதைக் கூட அவர்கள் தானாக உருவானதாக நம்புவதில்லை. இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இன்ன மாதிரியான மனித இனம், இன்ன பயன்பாட்டுக்காக செதுக்கிய கல் என்றுதான் சொல்கிறார்கள். என் சிந்தனை ஓட்டமும், அதே வழியில் தான், ஒரு கூறன கல் கூட ஒருத்தன் செதுக்கினால் தான் வரும், ஏனெனில் ஜடம் என்பது மண்டு, அதுக்கு சிந்திக்கத் தெரியாது, அதிலிருந்து சட்டி முதல்கொண்டு கம்பியூட்டர் வரை எதைச் செய்ய வேண்டுமானாலும் ஒரு புத்திசாலி கைவைத்தால் தான் முடியும். மனிதன் விமானத்தைக் கண்டுபிடித்தான், ஆனால் அதற்க்கு முன்னரே கண்டம் விட்டு கண்டம் போகுமளவுக்கு பறக்கும் எந்திரங்களான பறவைகள் இருந்தனவே, அவை எந்த என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து விட்டு தங்களது உடலை வடிவமைத்தன? ஆர்க்கிமிடிஸ் மிதவைத் தத்துவத்தை சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தானே கண்டுபிடித்தார், ஆனால் மீன்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நீந்துவதெப்படி? இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த சிந்தனையை தவறு என்று நீங்கள் நிறுவுவதானால் அப்படி ஒரு படைப்பாளி தேவையில்லை என்று நீங்கள் காட்டலாமே? மலையில் இருந்து உருட்டி விடப்பட்ட கல் கீழே வந்த போது அழகான திருவள்ளுவர் சிலையாக மாறிப் போனது அல்லது ஒரு தாளின் மேலே நான்கைந்து பெயிண்டு டப்பாவில் இருந்து பல வண்ண பெயிண்டுகள் விழுந்து அது யமுனை நதிக்கரையில் உள்ள தாஜ் மஹால் ஆக வந்து விட்டது என்று நீங்கள் காட்டலாமே? அவ்வாறு நீங்கள் காட்டி விட்டால் "அந்தப் படைப்பாளி யார்? என்றோ அதைத் தொடர்ந்து கேள்விகள் எதுவுமோ எழாதே? எல்லா நாத்தீகர்களையும் நான் இதைத்தான் கேட்கிறேன், ஏன் ஒருத்தர் கூட இதற்க்கு பதில் சொல்வதில்லை?

  பதிலளிநீக்கு
 21. \\அப்படி ஒரு படைப்பாளி இருந்தால், அவர் எதைக்கொண்டு இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார்? குயவன் சட்டியை உருவாக்கினான் என்றால் அவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறான் என்ற அறிவோம். இந்த லாஜிக் பிரகாரம் எப்படி குயவன் களிமண்ணிலிருந்து சட்டியை உருவாக்குகிறானோ அப்படி இந்தப் பிரபஞ்சத்தை அந்தப் பெயர் தெரியாத ஆள் எதை வைத்து படைத்தார்?\\

  சில சமயம் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் சில சமூக விரோதிகளைப் பிடிக்க சிறப்புப் படை செல்லும். ஒரு சமயம், அவ்வாறு செல்லும்போது காட்டுக்குள் ஓரிடத்தில் அரிசி பருப்பு, எண்ணெய், காய்கறிகள் என உள்ளன, ஒரு அடுப்பில் கறிக்குழம்பு வெந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும், அவர்கள் தற்போதுதான் இந்த இடத்தை விட்டிருக்க வேண்டும் அதிக தூரம் போயிருக்க முடியாது என்று ஒரு காவலர் சொல்கிறார். இதை யாரும் சந்தேகிக்கப் போவதில்லை. அவர் எப்படி அவ்வளவு நம்பிக்கையாகச் சொல்கிறார்? பாத்திரம் தானே அடுப்பில் எரி உட்கார்ந்து கொண்டு அடியில் நெருப்பை பற்ற வைத்துக் கொண்டு அவர் எப்போதும் பார்த்ததில்லை, வீட்டில் பெண்டாட்டி ஏற்றி வைத்து நெருப்பு மூட்டினால் தான் அவ்வாறு ஆகும் என்ற அனுபவம் தானே. அதை கேள்வி கேட்பதாக எண்ணி, சரி அப்படியானால் எத்தனை பேர் இருந்தார்கள், அதில் ஆண் எத்தனை பெண் எத்தனை, அவர்கள் என்ன உடை போட்டிருந்தார்கள், அவர்களுக்கு இந்தப் பொருட்கள் எங்கேயிருந்து கிடைக்கப் பெற்றார்கள் என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் பாவம் அந்த காவலர் என்ன செய்வார்? நண்பர்களே, நான் இந்த ஜடத்தை ஒழுங்கமைத்த ஒரு புத்திசாலி இருக்கிறான் என்றுதான் சொன்னேன், அது பல முறை நான் சொன்ன மாதிரி ஜடத்தின் பண்புகளைப் பார்த்து, ஆனால் அவர் கோவிலில் தான் இருக்கிறான், சர்ச்சில் தான் இருக்கிறான், இல்லை மசூதியில் தான் இருக்கிறான் என்றோ, அவனுக்கு தினமும் கிடா வெட்டுங்கள் என்றோ எப்போதாவது சொன்னேனா? நானும் உங்களைப் போல பிறந்து வளர்ந்து இந்த உலகை நோக்கும் ஒரு அறியாதவந்தானே? எனக்கு மட்டும் கடவுளிடம் பேசும் செல்போன் இருக்கிறதா என்ன? நான் கடவுள் இருப்பை பற்றி சொன்ன வாதத்தில் தவறு இருந்தால் அதை நீங்கள் சுட்டி காட்டலாம், அதை உங்களில் யாராலும் செய்ய முடியவில்லையே? அப்படியானால், இறைவன் இருக்கிறான், ஆனால் அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது, எனவே அவரவர் வழியில் அவனை வழிபட்டால் என்ன தவறு?

  பதிலளிநீக்கு