திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இயற்கை உரம் எங்கிருந்து கிடைக்கும்?


இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வு இன்று நம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறது. நல்ல மாற்றம். அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள்  ஆவார்கள். நான் தேசத்துரோகியாக விரும்பவில்லை. முன்பு இருந்தேன். இப்போது மாறி விட்டேன்

தேசத் துரோகிகளுக்கு அவர்கள் முக்தியடைந்த பிறகு நரகப் பிராப்திதான் கிடைக்கும். அங்கு அவர்களை கொதிக்கும் எண்ணைக் கொப்பறைகளில் குளிப்பாட்டிய பின் செயற்கை விவசாயத்தில், செயற்கை உரங்களும், செயற்கைப் பூச்சி மருந்துகளும் அடித்து வளர்க்கப்பட்ட பயிர்களின் மகசூல்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளே கொடுக்கப்படும்.

இயற்கை விவசாயத்தை ஆதரித்தவர்களை எல்லாம், நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரித்த உணவுகள் வழங்கப்படுவார்கள்.

நரகத்தில் இருக்கும் முன்னாள் விவசாய மந்திரி திரு.சி. சுப்பிரமணியம் அவர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்ட தகவல் இது. அவர்தான் செயற்கை விவசாயத்தை இந்தியாவில் புகுத்தியவர். அவருடைய சகா ஒருவர் இன்னும் இருக்கிறார். அவரும் சுப்பிரமணியம் போன இடத்திற்குத்தான் போவார் என்பது உறுதி.


இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சம் "இயற்கை உரங்களை மட்டும்" உபயோகப்படுத்துவது. மற்ற அம்சங்களைப் பிறகு பார்க்கலாம்.

இயற்கை உரங்கள் எங்கிருந்து கிடைக்கும்?

1. மிருகங்களின் கழிவுகள்.
2. மனிதனின் கழிவுகள்
3. பசுந்தாள் உரப்பயிர்கள்
4. மரங்கள் செடிகளில் இருக்கும் இலை, தழைகள்
5. நுண்ணுயிர் உரங்கள்
6. குளங்கள், ஏரிகளில் இருக்கும் வண்டல் மண்

பதினெட்டு, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் 1960 வரை, மேற்கண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தித்தான் விவசாயம் நடந்தது என்பதை அனைவரும் அறிவீர்கள். அப்போது மக்கள் எவ்வளவு ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார்கள் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

(தேசத்துரோகிகள் சொல்வதை நம்பாதீர்கள் - அப்போது இந்தியனின் சராசரி ஆயுட் காலம் 45 வருடம் என்றும் இப்போது இந்தியனின் சராசரி வயது 65 என்றும் சொல்வார்கள். தவிர, அப்போது இந்தியாவில் பல பஞ்சங்கள் தலைவிரித்தாடின, ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தார்கள் என்றும் சொல்வார்கள். எல்லாம் வயித்தெரிச்சலில் சொல்வது.அவர்கள் எல்லாம் கட்டாயம் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வேண்டாம்).

இந்த இயற்கை உரங்கள் இந்தியாவில் மிகுந்து கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் அறியாமையினாலும் விஞ்ஞானிகளின் துர்ப்போதனையினாலும் இந்த உரங்களைப் பயன்படுத்துவதில்லை. அவை வீணாகப் போய்க் கொண்டிருக்கின்றன. தவிர, கால்நடைகளை வளர்ப்பதற்குச் சோம்பல்பட்டு அவைகளை மாமிசத்திற்காக அனுப்புகிறார்கள். மனிதக்கழிவுகளை சேகரித்துப் பயன்படுத்துவதில்லை. விவசாய வேலைகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த அநியாயங்களை தடுத்து நிறுத்தவேண்டும். இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி ஏற்படவேண்டும். இதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார். இந்தப் போராட்டம் அடுத்த சுதந்திர தினத்தன்று டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கும். அனைவரும் தயாராக இருங்கள். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொர்க்கத்திற்கு செல்ல விசா கொடுப்பதற்காக சித்திரகுப்தன் ஸ்பெஷல் அலுவலகம் திறக்கப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்.

தேசப் பற்றுள்ளோரே, இயற்கை விவசாயத்தை ஆதரிப்பீர்.

19 கருத்துகள்:

 1. //இயற்கை விவசாயத்தை ஆதரித்தவர்களை எல்லாம், நேராக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரித்த உணவுகள் வழங்கப்படுவார்கள்.//

  பழைய முறையான இலை போட்டு நீர் தெளித்து பந்தியில் அமர்ந்தா? அல்லது நவீன புஃபே முறையிலா?! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமா தலை வாழை இலை போட்டுத்தான் பந்தி நடக்கும். அதுதானுங்க இயற்கை முறை.

   நீக்கு
 2. எங்கெ போனாலும் சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டிவிட்டுட்டீங்க:-))))

  பதிலளிநீக்கு
 3. தங்களிடம் எனக்கு பிடித்ததே இந்த "நக்கல்" தான்.
  இனம் இனத்தோடுதானே சேரும்!

  பதிலளிநீக்கு
 4. இயற்கை விவசாயத்தைப் பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வு இன்று நம் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறது. நல்ல மாற்றம். அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் ஆவார்கள். நான் தேசத்துரோகியாக விரும்பவில்லை. முன்பு இருந்தேன். இப்போது மாறி விட்டேன்//

  நல்ல மாற்றங்கள் நல்லது தானே!

  இயற்கையை மதித்து நடந்தால் இயற்கை நமக்கு அள்ளி வழங்கும்.

  பதிலளிநீக்கு
 5. இந்தியாவில் இயற்கை விவசாய மறுமலர்ச்சி நிச்சயம் ஏற்படவேண்டும். !!

  பதிலளிநீக்கு
 6. இயற்கையை மறந்து செயற்கைக்கு சென்றால் விரைவில் அழிவு என்பதை எல்லோரும் உணரத் தொடங்கி விட்டார்கள்!

  இன்று என் தளத்தில்
  அஞ்சு ரூபாய் சைக்கிள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

  பதிலளிநீக்கு
 7. இயற்கை விவசாயம் ஏன் சாத்தியமில்லை, என்ன தடஙகல்கள் என்பதை விளக்கமாகப், பொறுமையாகச் சொல்லியிருக்கலாம். இது போன்ற உள்குத்துப் பதிவுகளால் யாருக்கும் நனமையில்லையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லியிருக்கலாம், ஹுஸைனம்மா. முன்பு ஒரு பதிவில் இயற்கை விவசாயம் நல்லதுதான், ஆனால் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று எழுதியிருந்தேன். ஆனால் அதை மக்கள் பலவிதமாகத் தாக்கி பின்னூட்டம் போட்டார்கள். அதற்காக நான் வருத்தப்படவில்லை. ஆனால் ஜனங்கள் எதை விரும்புகிறார்கள் என்று புரிஞ்சு போச்சு.

   இனிப்பான பொய்களுக்குத்தான் இன்றைய காலகட்டத்தில் வரவேற்பு இருக்கிறது. உண்மையைச் சொல்லுபவன் பைத்தியக்காரனாகிறான் நடைமுறை உலகில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

   உதாரணத்திற்கு ஒன்றரை லட்சம் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் வருமானம், இரண்டு வருடம் கழித்து இருபதாயிரம் போனஸ், சேர்ந்தவுடன் எட்டு கிராம் தங்கம் என்ற விளம்பரங்களைப் பார்த்து விட்டு எவ்வளவு பேர் பணத்தைக் கட்டினார்கள். இது எப்படி சாத்தியப்படும் என்று யோசித்தார்களா? காலம் காலமாக இப்படித்தானே பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எவனோ கொள்ளையடித்துச் செல்கிறான். ஏன் இப்படி நடக்கிறது?

   எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு: "கின்னாரக் காரனுக்கு கிழவன் சொல் ஏறுமா" அப்படீன்னு.

   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. இப்படிச் சொன்னாலாவது மக்கள் மனதில் பதியுமா என்ற ஆதங்கத்தில் எழுதிய பதிவு. இனிமேல் இப்படி எழுதுவதில்லை. மீண்டும் நன்றி, அம்மா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களுக்குத் தெரியாததா. இந்த உலகில் மாறுவது ஒன்றே மாறாதது.

   நீக்கு
 9. அமெரிக்காவுல காசு இருக்கற படிச்ச கோமகன்களும் மகள்களும் Organic Food தான் வாங்கி திங்கறாங்க. காசு குறைச்சு இருக்கறவன் நரகத்துக்கு போகட்டும் என இருக்காங்க, சரியான சுயநலவாதிகள். தினமும் நடைபயின்றால் நிறைய நோய்கள் வராதுன்னு சொல்றாங்க கிரகம் பிடிச்சவனுங்க நோய் வந்தா இரண்டு மாத்திரை வாங்கி தின்னா சரியாயிடுமுன்னு தெரியாதா. இப்ப நம்ம மக்கள்கிட்ட காசு புழக்கம் அதிகம் அதான் நோயில்லாமல் மருந்து வாங்கி நீண்ட நாள் வாழும் இரகசியம் (சிதம்பர ரகசியம் அல்ல :))

  இடுகையில் கிண்டல் இருந்தாலும் இயற்கை விவசாயம் & செயற்கை விவசாயத்தில் உள்ள நிறை குறைகளை துறைசார்ந்த பெரியவர் என்ற முறையில் பகிர்ந்தால் நாலு பேரு தெரிஞ்சிக்குவோம். மக்கள் இரசிக்கத்தான் என் பதிவு அப்படின்னு நீங்க நினைச்சா அதை நான் குத்தம் சொல்லமுடியாது.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் ஐயா.
  உங்கள் ஆரம்ப தொனியிலிருந்து இறுதிவரை கவனமாக கண்ணுற்றேன். உங்களது இந்த பதிவின் நோக்கம் எண்ணவோ என குழம்பிய போது பின்னுட்டங்கள் தான் அதை தௌிவிபடுத்தின, நீங்கள் எதிபார்த்தது நிச்சயம் கிடைக்கும். ஆனால் ஏன் இயற்கை விவசாயம் சாத்தியமில்லை அல்லது அதற்கான சரியான அணுகுமுறை என்ன என்பதையெல்லாம் இன்றைய சூழ்நிலைக்கேற்ப எழுதினால் ஆர்வலர்கள் அறிந்து கொள்வோம். உண்மையை உடைத்து சொல்பவர் மேல் கோபமில்லை.. உங்களது பணியும் அணுபவமும் எங்களை சிந்திக்க வைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 11. மனிதக் கழிவுகள் அமெரிக்காவில் உபயோகப்படுத்த முடியாது; மாட்டு சாணியைக் கூட நேரடியாகாக எடுத்து கொட்டமுடியாது; பதப் படுத்தப்பட்டு தான் போடுவார்கள்; அதாவது, அதை உபயோகிப்பவர்களுக்கும் வயலில் இறங்கி வேளை செய்யும் ஏழை பாழைகளுக்கும் வியாதி வராத வண்ணம் செய்து தான் உபயோகப் படுத்த முடியும். அதானால் தான் organic food விலை அதிகம். இந்தியாவில் மலக் குழியிலே நாம் நம் சக மனிதனை இறக்குவதால் பிரச்சினை இல்லை.

  இந்தியாவிலும் மனிதக் கழிவுகள் உபயோகபப்டுத்த தடை உண்டு தானே! எங்க குடும்பத்தில் யாரும் அப்படி செய்யவில்லை!

  பதிலளிநீக்கு