திங்கள், 13 ஆகஸ்ட், 2012

ஆசிரியராக வேலை பார்த்தபோது நான் செய்த கொடுமைகள்


தலைப்பு சரியாக அமையவில்லை. பரவாயில்லை. பதிவைப் படித்தபின் உங்களுக்குப் பிடித்த தலைப்பை வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பில் நான் சொல்ல விரும்பியது என்னவென்றால் நான் ஆசிரியனாக இருந்தபோது என் கொள்கைகள் என்னென்ன என்பதுதான். தலைப்பு புரிஞ்சு போச்சா, செய்திக்குப் போவோம்.

ஒரு பத்து வருடம் இளநிலை விவசாயப் படிப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். ஐந்து வருடம் செய்முறை விளக்க பரிசோதனைக் கூடத்திலும் ஐந்து வருடம் வகுப்புப் பாடம் நடத்துபவனாகவும் பணி புரிந்திருக்கிறேன். பிறகு பதவி உயர்வுகள் காரணமாக வேறு பதவிகளுக்கு மாற்றப்பட்டேன். இருந்தாலும் அவ்வப்போது முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தேன்.

இளங்கலை ஆசிரியனாக இருந்தபோது கொஞ்சம் கொடுமைக் காரனாகத்தான் இருந்தேன். மாணவன் கல்லூரிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் அவன் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் நான்.

நான் சொல்லிக்கொடுத்தது இயல்பியல் பாடங்கள் அதாவது கெமிஸ்ட்ரி. விவசாயப் பட்டப்படிப்பில் முதல் வருட மாணவர்களுக்கு நான் இயல்பியல் பரிசோதனை வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்தேன. பரிசோதனைச் சாலைக்கு வரும் மாணவர்கள் காக்கி அரைக்கால் டவுசரும், அரைக்கை சட்டையும் போட்டுக்கொண்டு வருவார்கள். ஏறக்குறைய அனைத்து செயல்முறை வகுப்புகளுக்கும் இந்த யூனிபார்ம்தான்.

இதில் மேல் சட்டையில் எல்லா பட்டன்களையும் போட்டிருக்கவேண்டும். இல்லாவிட்டால் வகுப்பில் அனுமதி இல்லை. (டிராயரில் ஜிப் போடாவிட்டால் பரவாயில்லையா என்று கேட்கக்கூடாது. ஆப்சன்ட் போட்டுவிடுவேன், ஜாக்கிரதை.) மாணவர்கள் வகுப்புக்குள் வரும்போது எல்லா பட்டனையும் போட்டுக் கொண்டுதான் வருவார்கள். இன்றும் கூட என் பழைய மாணவர்கள் என்னைப் பார்த்தால் அவர்கள் அறியாமலேயே கை சட்டைப் பட்டனுக்குப் போகும்.

வருகைப் பதிவேடு பெயர்கள் படித்து முடிப்பதற்குள் வந்தால்தான் வகுப்புக்குள் அனுமதிக்கப்படுவார்கள். நான் பெயர்கள் வாசித்து முடிந்தவுடன் பரிசோதனைச் சாலையின் கதவு மூடப்படும். அதன் பிறகு வருபவர்கள் திரும்பித்தான் செல்லவேண்டும்.

பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்யும்போது நான் சொல்லி, செய்து காட்டியவாறுதான் செய்யவேண்டும். வேறு மாதிரி செய்தால் அந்த மாணவன் வெளியேற்றப்படுவான். காரணம், வேறு மாதிரி செய்யும்போது தவறுகள் ஏற்படும். அதையெல்லாம் அவன் புரிந்து கொள்ளும் வயதில்லை. ஆகவே சர்வாதிகாரம்தான்.

சரி, இதற்கெல்லாம் மாணவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களா, கொடி பிடிக்க மாட்டார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. பிடித்தார்களே! அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்லுகிறேன்.




27 கருத்துகள்:

  1. ஐயோ...பயங்கரக் கொடுமையால்லே இருக்கு.

    பசங்க சமாளிச்சுருப்பாங்களே:-))))

    ஆனால்..... தேர்வு எழுதும் சமயம் டீச்சர் எழுதிப்போட்டதை அப்படியே காப்பி பண்ணி நெட்டுரு போட்டு பரிட்சைத்தாளில் வாந்தி எடுக்க வைக்கும் கல்வி முறையில் வேற எப்படி இருந்திருக்க முடியும்?

    ஞாபகசக்தியை அறிவுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது ஆசிரியர்களும் எங்களிடம் கண்டிப்பாகத்தான் இருந்தார்கள். அப்போது நாங்கள் அதை விரும்பவில்லையென்றாலும் அந்த வயதில் அது தேவைதான் என்பதை பணியில் சேர்ந்ததும் புரிந்துகொண்டேன். மேலும் எழுத்துதேர்வு மற்றும் ஆய்வுத்தேர்வுக்கு உள்ள மதிப்பெண்கள் 150 ல் Pass Mark வாங்கினாலும் மாணவனின் நடத்தைக்காக ஒதுக்கப்பட 45 மதிப்பெண்கள் ஆசிரியர் கையில் இருந்ததால் அவர் Pass Mark கொடுத்தாலொழிய தேர்வில் வெற்றி பெறமுடியாது என்பதால் யாரும் வாலாட்டியதில்லை. தங்களின் மாணவர்கள் கொடிபிடித்ததை பற்றி அறிய ஆவல்.

      நீக்கு
    2. அன்றைக்கு மாணவர்களின் எதிர்காலம்தான் கண்ணுக்குத் தெரிந்ததே தவிர, அவர்களிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை.

      நீக்கு
    3. //பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்யும்போது நான் சொல்லி, செய்து காட்டியவாறுதான் செய்யவேண்டும். வேறு மாதிரி செய்தால் அந்த மாணவன் வெளியேற்றப்படுவான். காரணம், வேறு மாதிரி செய்யும்போது தவறுகள் ஏற்படும். அதையெல்லாம் அவன் புரிந்து கொள்ளும் வயதில்லை. //

      This what so called "PREJUDICE". haha

      நீக்கு
  2. //இயல்பியல் பாடங்கள் அதாவது கெமிஸ்ட்ரி//

    சாஆஆஆஆஆர்!! இயற்பியல்னா கெமிஸ்ட்ரியா??

    ஆமாம், அப்படித்தான், இதையும் ஒத்துக்கணும், இல்லைன்னா பதிவைவிட்டு வெளியே போங்கன்னு தண்டனை கொடுப்பீங்களோ?? :-D

    :-))))))))))))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்குத்தான் தமிழ்ல பதிவு எழுதாதீங்கன்னு நண்பர்களெல்லாம் சொன்னாங்க, இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறம் பாருங்க.

      நீக்கு
  3. Ayya, Chemistry is "Vedhiyiyal". Iyarpiyal is "Physics"

    பதிலளிநீக்கு
  4. Physics : Yeyarbial

    Chemistry : Veathyiyal.

    For you info.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல வேளை, என் கண்ணைத் தெறந்தீங்க. இல்லைன்னா நான் இயல்பியல்னா கெமிஸ்ட்ரின்னே நெனச்சிக்கிட்டு இருந்திருப்பேன்.

      நீக்கு
  5. கட்டுரை அருமை . தொடருங்கள். தேவையான கண்டிப்பு தேவைதான் . நான் லயோலா கல்லூரி மாணவனாக இருந்தபோது வாழ்ந்த மகிழ்வான காலம் பசுமையாக உள்ளது
    "இதுக்குத்தான் தமிழ்ல பதிவு எழுதாதீங்கன்னு நண்பர்களெல்லாம் சொன்னாங்க, இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறம் பாருங்க" நீங்க தழிழ்லேயே எழுதுங்க . உங்க ஆங்கிலம் மிகவும் உயர்வாக இருந்து எங்களுக்கு ஒன்றும் புரியாமல் போய்விடும் அதுவும் விவசாய ஆங்கிலத்தில் உழ ஆரபித்தால் முடிவு நல்ல விளைவுதான்

    பதிலளிநீக்கு
  6. இவையெல்லாம் கொடுமை இல்லை ஐயா... ஒழுக்கம்...

    அடுத்த பகுதி என்னவென்று ஆவல்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //திண்டுக்கல் தனபாலன்13 August 2012 12:43 PM
      இவையெல்லாம் கொடுமை இல்லை ஐயா... ஒழுக்கம்...//

      கொடுமை

      நீக்கு
  7. \\ மாணவன் கல்லூரிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் அவன் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் நான்.\\ குருகுல கல்வி முறையின் மிச்ச சொச்சம் இது!! நாங்கள் படித்த போது இப்படித்தான் இருந்தது, ஆசிரியரிடம் எழுந்து நின்றுதான் [சில சமயம் கைகட்டிக் கொண்டு] பேச வேண்டும், ஆசிரியர் நடந்து செல்லும் போது நாங்கள் சைக்கிளில் சென்றால் கூட கீழே இறங்கி விடுவோம். தவறு செய்தால் ஆசிரியர்களும் பெற்றோர்களைப் போலவே, பிரம்பால் விளாசி தள்ளிவிடுவார்கள். இப்போ நிலைமை தலை கீழ். வாயால் கண்டித்தால் கூட நீங்கள் என்னை அடித்தீர்கள் என்று போலீசில் கம்ப்ளைன்ட் செய்து விடுவேன் என்று ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்டுக்கிறார்களாம். வீட்டில் பிரச்சினை, மாணவன் மீது தனிப்பட்ட வெறுப்பு என்ற காரணங்களுக்காக கண்ணு மண்ணு தெரியாமல் ஆசிரியர்கள் அடிப்பது தவறு, மாணவன் நலனுக்காக mild punishment தருவது தவறல்ல, இன்றைய நிலையால் இழப்பு ஆசிரியர்களுக்கல்ல, மாணவர்களுக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காட்டின கண்டிப்பில் நூற்றில் ஒரு பங்கு கூட இன்று காட்ட முடியாது.

      நீக்கு
  8. \\இல்லைன்னா நான் இயல்பியல்னா கெமிஸ்ட்ரின்னே நெனச்சிக்கிட்டு இருந்திருப்பேன்.\\அது இயல்பியலும் இல்லை சார், Physics -இதைத் தமிழில் இயற்பியல் என்று சொல்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படிச்சப்ப இந்த இயல்பியல், வேதியல் எல்லாம் இல்லீங்க, இப்பத்தான் வந்திருக்கு, அதனாலதான் கொஞ்சம் கன்ஃபூசன். அப்பெல்லாம் நான் Physics, chemistry இவைகளைத்தான் படித்தேன்.

      நீக்கு
  9. ரொம்ப காரார் ஆசாமிதான் போல .............உங்களை போல ஒரு வாத்தியாறை பற்றி மறந்த குடை தலைப்பில் ஓர் கதை எழுத முயன்றிருக்கிறேன் முடியுமானால் பாருங்கள் http://sangarfree.blogspot.com/2012/08/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  10. கறாரான ஆசிரியர்களுக்கு எப்போதுமே நல்ல மாணவர்களிடமிருந்து மிகுந்த மதிப்புக் கிடைக்கிறது, இதற்குக் கொஞ்சம் தாமதம் ஆகிறது அவ்வளவுதான்... கறாரான ஆசிரியர்களிடம் படித்த மாணவர்கள் எப்பொழுதுமே உயர்ந்த நிலையை அடைகிறார்கள்...

    அன்புடன்,

    சிவா,
    தெற்கு சூடான்,
    ஆஃப்ரிக்கா...
    nirmalshiva1968@gmail.com

    பதிலளிநீக்கு
  11. மாணவன் கல்லூரிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் அவன் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் நான்.

    கொடி பிடித்தாலும் கோஷம் போட்டாலும் இன்று நல்லநிலையில் இருப்பதற்கு தாங்கள் போட்ட வலுவான அடித்தளமும் ஒரு காரணம்தானே ஐயா..

    பதிலளிநீக்கு
  12. கண்டிப்பாக இருப்பதற்கு கொடுமையாக இருந்தது என்று பொருளா. ?நாம் எல்லோரும் மாணவர்களாய் இருந்து வந்தவர்கள் தானே. கண்டிப்பான ஆசிரியர்கள் நினைவில் நிலைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  13. இப்போது பழைய மாணவர்களைப் பார்க்கும்போது அவர்கள் அந்நாட்களை எவ்வாறு நினைவு கூர்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  14. மாணவன் கல்லூரிக்கு வருவது பாடம் கற்றுக் கொள்ள மட்டும் அல்ல. வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் அவன் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் நம்பிக்கை உள்ளவன் நான்.


    தாங்கள் ஒரு மதிப்பிற்குரிய ஆசிரியர் என்பது புலனாகிறது.

    பதிலளிநீக்கு