சனி, 4 ஆகஸ்ட், 2012

உங்களுக்குப் பேசத் தெரியுமா?



நீங்கள் மிக நன்றாகப் பேசுவீர்கள் என்று நான் அறிவேன். உங்களைப் போல் சுவாரஸ்யமாகப் பேசக்கூடியவர்கள் அதிகம் பேர் இல்லையென்பதையும் நான் அறிவேன். ஆனால் நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சை அடுத்தவர்கள் காது கொடுத்துக் கேட்பதில்லை என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆனால் அதை நான் அறிவேன். இந்த சூட்சுமத்தை அறியாமல்தான் பலர் வாழ்க்கையில் சங்கடப்படுகிறார்கள். மற்றவர்களையும் சங்கடப்படுத்துகிறார்கள்.

நீங்கள் உங்கள் நண்பரிடம் ரொம்ப முக்கியமான சமாசாரத்தைச் சொல்லிக்கொண்டு இருப்பீர்கள். அவர், இவன் இந்தக் கழுத்தறுப்பை எப்ப முடிப்பான், நாம பஸ் பிடிச்சு எப்ப வீட்டிற்குப் போய்ச் சேருவது என்று கவலையில் இருப்பார். பல பேர் இப்படித்தான், அடுத்தவன் என்ன நினைப்பான், அவன் என்ன சூழ்நிலையில் இருக்கிறான் என்ற நினைப்பேயில்லாமல் மணிக்கணக்கில் அறுப்பார்கள்.

அடிக்கடி, “என்ன நான் சொல்றது புரியுதா” என்ற கேள்வி வேற கேட்டு வெறுப்பேத்துவார்கள். ஒரு அவசர வேலை இருக்கிறது, நான் போகவேண்டும் என்றால் அதைக் காதிலேயே வாங்க மாட்டார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதிரே ஒரு ஆள். அவ்வளவுதான். இவர்கள்தான் வயதான பிறகு வீட்டுத் திண்ணையில் தனியாக உட்கார்ந்துகொண்டு, தனக்குத்தானே பேசிக்கொண்டு இருப்பவர்கள்.
போனில் பேசுபவர்கள் இன்னும் பெரிய கழுத்தறுப்புகள். நேரில் முகம் பார்த்து பேசும்போதே அடுத்தவர்களின் மன நிலையைக் கவனிக்காதவர்கள், போனில் முகத்தைப் பார்க்காமல் பேசும்போது எப்படி நடந்து கொள்வார்கள் என்று நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களுக்கு நீங்கள் சும்மா “ஊம்” சொல்லிக்கொண்டு இருந்தால் போதும். நீங்கள் ஏதாவது சொல்ல இடைவெளியே கொடுக்க மாட்டார்கள். அப்படி ஏதாவது சொல்ல ஆரம்பித்தால், இருங்க, நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடித்தபின் நீங்கள் பேசலாம் என்பார்.

இவர் எப்போ சொல்லி முடிக்கிறது, நாம எப்போ பேசறது, வீண் வேலைதான். பேசாமல் போனை கீழே வைத்து விட்டு நம் வேலையைக் கவனிக்கலாம். அதற்கும் இந்த பிரஹஸ்பதிகள் விடமாட்டார்கள். அவர்களுக்கு ஒரு ஆள் “ஊம்” கொட்டிக்கோண்டே இருக்கவேண்டும். எது எதற்கோ மிஷின் கண்டு பிடிக்கிறார்களே, இந்த “ஊம்” கொட்டுவதற்கு ஒரு மிஷின் கண்டு பிடித்தால் எவ்வளவு உபயோகமாக இருக்கும்?
எனக்கு சில நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு காது கொஞ்சமாகத்தான் கேட்கும். ஆனால் அவர்கள் அதை உயிர் போனாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். செவிட்டு மிஷின் வாங்கி வீட்டில் பத்திரமாக வைத்திருப்பார்கள். தப்பித்தவறி அதை காதில் வைத்துக்கொண்டாலும் ஞாபகமாக சுவிட்சை ஆஃப் பண்ணிவைத்திருப்பார்கள். காரணம் பேட்டரி தீர்ந்து போய் விடுமாம். ஏனய்யா இந்தக் கஞ்சத்தனம் பண்ணுகிறீர்கள் என்று கேட்டால், ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்பத்தான் ஆஃப் பண்ணினேன் என்பார்கள்.

இவர்களுடன் பேசுவது ஒரு தனி கலை. அவர்கள் பேசும் சப்ஜெக்ட்டுக்கு சம்பந்தமாய் பேசினால் நம் உதடு அசைப்பை வைத்து ஓரளவு புரிந்து கொள்வார்கள். வேற சப்ஜெக்ட்டுக்கு போனீர்களானால் வந்தது வம்பு. நீங்கள் சொல்வதை அவருக்குப் புரிய வைப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும். ஆனால் இவர்களுக்கு மற்றவர்களுடன் அளவளாவ மிகவும் பிடிக்கும். யாராவது கிடைத்தால் மிகுந்த சந்தோஷம் கொள்வார்கள். அப்படி யாரும் கிடைக்காவிட்டால் போன் போட்டு நண்பர்களை வரவழைப்பார்கள். இவர்களிடம் காலம் தள்ள ரொம்ப ரொம்ப பொறுமை வேண்டும்.

சிலர், யாராக இருந்தாலும் வலியப்போய் ஒட்டிக்கொண்டு சம்பந்தமில்லாமல் ஏதாவது கேட்டுத் தொண தொணப்பார்கள். விசேஷ வீடுகளில் இந்த ஆட்கள் பண்ணும் அக்கிரமம் சொல்லி முடியாது. இவர்களை சிலர் சமாளிக்கும் விதமே வித்தியாசமாக இருக்கும். அங்கு கண்ணில் தென்படும் யாராவது ஒருத்தரைக் கூப்பிட்டு, “இவர் என்னமோ கேட்கிறார், என்ன என்று பாருங்கள்” என்று சொல்லிவிட்டு தப்பித்துக் கொள்வார். அந்த ஆள் மாட்டிக்கொண்டு முழிப்பார்.

இதில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்று கண்டு பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கான நல்ல நல்ல ஆலோசனைகளை இலவசமாகச் சொல்ல நான் இருக்கிறேன். பின்னூட்டத்தில் தொடர்பு கொள்ளவும்.

17 கருத்துகள்:

  1. இது போல் நிறைய. நிறைய.. நிறைய பேர்கள்....

    தப்பித்துக் கொள்ள ஒரு வழியை சொல்லி விட்டீர்கள்...

    நன்றி…
    (த.ம. 2)

    பதிலளிநீக்கு
  2. அச்சச்சோ..... எனக்குப் பேசத்தெரியாதுங்க:(

    பதிலளிநீக்கு
  3. நகைச்சுவையாக நல்லவிசயத்தை பகிர்ந்துள்ளீர்கள்! நன்றி!
    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  4. பேசப் பழக வேண்டும்
    அனைவருக்கும் தேவைப்படும் பதிவு
    தங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  5. நாம் பேசுவதை எதிர் ஆள் விரும்பவில்லை என்பதை எப்படி அறிந்து கொள்வது; பதிவு போட்டால் நலம்; உண்மையாகவே கேட்கிறேன்

    அதேமாதிரி எப்படி அவர் பேசுவது நமக்கு பிடிக்க வில்லை என்பதை சொல்வது.

    தயவு செய்து இதற்கு பதிவு போடுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்குப் போய் ஒரு தனி பதிவு எதுக்குங்க. நீங்க பேசறப்போ எதிராளி ஒண்ணும் பேசாம, மரம் மாதிரி நின்னான்னா, அவன உட்டுடுங்க, பொளச்சுப் போகட்டும்.

      எதிராளி பேசறது உங்களுக்குப் புடிக்கலீன்னா, "கொஞ்சம் இருங்க, இப்ப வர்றேன்னு" சொல்லீட்டு "எஸ்" ஆயிடுங்க.

      அவ்வளவுதான். மேட்டர் முடிஞ்சுது.

      நீக்கு
  6. தினமும் பிளாக் டிசைனை மாற்றுவது உங்களால் மட்டுமே முடியும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரங்கு பிடிச்சவன் கையும் மவுஸ் பிடிச்சவன் கையும் சும்மா இருக்காதுங்க.

      நீக்கு
  7. அவர்களுக்கு காது கொஞ்சமாகத்தான் கேட்கும்
    செவிட்டு மிஷின் வாங்கி வீட்டில் பத்திரமாக வைத்திருப்பார்கள். தப்பித்தவறி அதை காதில் வைத்துக்கொண்டாலும் ஞாபகமாக சுவிட்சை ஆஃப் பண்ணிவைத்திருப்பார்கள்.

    ஆனால் இவர்களுக்கு மற்றவர்களுடன் அளவளாவ மிகவும் பிடிக்கும்.

    நான் இந்த‌ வகையை சேர்ந்தவன். ஒன்னு மட்டும் சரியில்லை. அதாவது மட்றவர்களுடன் பேசுவது.

    பதிலளிநீக்கு
  8. எனக்கும், ஏன் எல்லோருக்குமே இந்த அனுபவங்கள் பொது என்று நினைக்கிறேன்! நாங்கள் கூட இதே போன்றதொரு பதிவு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம்! :))

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள ஐயா வணக்கம்
    கண் இல்லாதவன் பார்க்க ஆசைப்படுவான்
    கால் இல்லாதவன் நடக்க ஆசைப்ப்டுவான்
    காது கேட்காதவர்கள் ஓசையை கேட்க எந்த அளவுக்கு ஆசை இருக்குமோ அந்த அளவிற்கு மற்றவர்களுக்கும் ஆசை இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் பேசுவார்கள் அவர்களின் ஆசையை நம்மாள் நிறைவேற்ற முடியாது அவர்களின் நம்பிக்கை அதையாவது காப்பாற்றுவோமே

    பதிலளிநீக்கு