ஞாயிறு, 29 ஜூலை, 2012

பதிவுகளின் பயன்

.
பல்லாயிரக்கணக்கானவர்கள் பதிவு எழுதுகிறார்கள். உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பல விதமான கருத்துகள் எழுதப்படுகின்றன. இவைகளை எழுதுபவர்களுக்கோ அல்லது படிப்பவர்களுக்கோ இந்தப் பதிவுகளினால் என்ன பயன் என்று சிறிது சிந்திப்போம்.

பதிவு எழுத வந்தவர்கள் பெரும்பாலும் யாரையாவது பார்த்துத்தான் பதிவுலகத்திற்குள் வந்திருப்பார்கள். இதில் கூகுளின் பங்கு மகத்தானது. அவர்கள் இந்த வசதியைக் கொடுக்காவிடில் பதிவுலகம் இவ்வளவு வளர்ந்திருக்குமா என்பது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருந்திருக்க முடியும்.

இரண்டாவது எழுதுபவர்களின் கற்பனைக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. அவர்களின் எழுத்துத் திறமையை உலகிற்குக் காட்ட ஒரு வாய்ப்பாக அமைகின்றது. மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை. அவனுக்கு உணர்ச்சி பூர்வமான தேவைகளும் இருக்கின்றன. அவைகளில் ஒன்று தன் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் என்பது. இந்த தேவையை பதிவுகள் நல்ல முறையில் பூர்த்தி செய்கின்றது. அதனால்தான் பதிவுகள் பிரபலமாக இருக்கின்றன.

ஆனால் நாம் எல்லோரும் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். பதிவில் எழுதப்படும் கருத்துகள் எவ்வகையிலாவது படிப்பவர்களுக்கு உதவ வேண்டும். நகைச்சுவைப் பதிவு மனதை சந்தாஷப்படுத்தும். பயணப் பதிவுகள், நாமே அந்த இடங்ளுக்குப் போன உணர்வைக்கொடுக்கும். கதைகள் மனதை வருடிக்கொடுக்கும். ஆன்மீகப் பதிவுகள் கோவில்களுக்குப் போன திருப்தியைத் தரும்.

இவ்வாறு பலதரப்பட்ட பதிவுகள் ஏதாவது ஒரு வகையில் படிப்பவர்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கின்றன. ஆனால் சில பதிவுகள் படிப்பவர்களின் மனதைக் கெடுக்கும் விதமாகவோ அல்லது எதற்கும் உதவாத தகவல்களையோ தருகின்றன. அவ்வாறு எழுதுபவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும். நம் பதிவில் எழுதும் சிந்தனை மக்களுக்கு ஏதாவது வகையில் உதவுமா, இல்லையென்றால் அப்படிப்பட்ட பதிவுகளை எழுத தயங்க வேண்டும்.

தவிர, பதிவில் ஒரு சிந்தனை மக்கள் முன் வைக்கப்பட்டால் படிப்பவர்கள் அதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாகப் போடவேண்டும். பதிவுகள் ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக அமைய வேண்டும். அப்போதுதான் பதிவுகளின் முழுப் பயனும் கிடைக்கும். இன்றோ பின்னூட்டங்கள் வெறும் முகஸ்துதிகளாக இருக்கின்றனவே தவிர, ஆக்கபூர்வமான கருத்துகளாக இல்லையென்பது வருத்தத்திற்குரியது.

பதிவர்களின் சந்திப்பில் இத்தகைய கருத்துக்ளை விவாதித்தால் பதிவுலகம் ஒரு பயனுள்ள சக்தியாக உருவெடுக்கும் என்பது என் கருத்து. பதிவர்களே, சிந்தியுங்கள்.

30 கருத்துகள்:

  1. அன்பின் கந்தசாமி அய்யா - அருமையான சிந்தனை - அறிவுரை நன்று - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீனா அய்யாவிற்கு முதல் பின்னூட்டத்திற்காக மிக்க நன்றி.

      நீக்கு
  2. நல்ல ஆலோசனை. கூட்டு முயற்சி இருந்தால் நடக்கலாம். சென்னை சந்திப்பில் அலசலாம். நன்றி.
    (த.ம. 2)

    பதிலளிநீக்கு
  3. நல்ல யோசனை. பல்லாயிரக் கணக்கான பதிவுகள். பல்லாயிரக் கணக்கான கருத்துகள். பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. இரண்டாவது எழுதுபவர்களின் கற்பனைக்கு ஒரு வடிகால் கிடைக்கிறது. அவர்களின் எழுத்துத் திறமையை உலகிற்குக் காட்ட ஒரு வாய்ப்பாக அமைகின்றது. மனிதன் உணவினால் மட்டும் வாழ்வதில்லை. அவனுக்கு உணர்ச்சி பூர்வமான தேவைகளும் இருக்கின்றன. அவைகளில் ஒன்று தன் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் என்பது. இந்த தேவையை பதிவுகள் நல்ல முறையில் பூர்த்தி செய்கின்றது. அதனால்தான் பதிவுகள் பிரபலமாக இருக்கின்றன.//

    அருமையான அழகான விளக்கம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. //பின்னூட்டங்கள் வெறும் முகஸ்துதிகளாக இருக்கின்றனவே தவிர, ஆக்கபூர்வமான கருத்துகளாக இல்லையென்பது வருத்தத்திற்குரியது.//

    சரியான கருத்து. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் இப்போதைய கேள்வி.

    பதிலளிநீக்கு
  6. ஸல்யூட் சார்...உங்கள் பதிவிற்கு..
    எழுதுவதில் ETHICS இருக்க வேண்டும் என்று ஆசைப் படுபவன் நான்..
    நம் எழுத்துக்கள் யாரோ ஒருவருக்கு உபயோகப் பட்டால் மிக்க சந்தோஷம்..
    குப்பைகளை எழுத மனது ஒரு போதும் இடம் கொடுப்பதில்லை...
    இது வரை போனது போகட்டும் இனி புதிதாய் பிறப்பாய்..புதியதாய் படைப்போம் என்கிற எழுச்சி என்னுள் உருவாக்கிய எழுத்துக்களுக்கு.......
    இன்னுமொரு ஸல்யூட்!

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் கூகுள் பிரியர் என்பது தெரிகிறது. கூகுள் இந்த வசதியைக் கொடுக்காவிட்டாலும் பதிவுலகம் வளர்ந்திருக்கும். நிறைய நிறுவனங்கள் வலைப்பதிவு வசதியை கொடுக்கின்றன. வலைப்பதிவின் வளர்ச்சியை பார்த்து தான் கூகுள் பைரா லேப்சிடமிருந்து பிளாக்கர்-ஐ வாங்கியது. நாம் அடிக்கடி கூகுள் ஆண்டவரிடம் செல்வதால் அவர்களின் பிளாக்கர் வசதியை பயன்படுத்தினோம். கூகுளிடம் பிளாக்கர் வசதி இல்லாது இருந்தால் நாம் மற்றவற்றை பயன்படுத்தியிருப்போம். தமிழ் பதிவுலகில் நிறைய பேர் வேர்ட்பிரஸ் மூலம் பதிவுகளை இடுகின்றனர். மாலன் யாகூவின் மூலம் பதிவிட்டுகொண்டிருந்தார். கூகுளின் பல சேவைகளை பயன்படுத்துபவர் கூகுளே வலைப்பதிவு வசதியை கொடுப்பதால் இதிலேயே வலைப்பதிவு தொடங்குகின்றனர் (நானும் அதில் ஒருத்தன்).

    பதிலளிநீக்கு
  8. சாமி சார்,

    கலக்கல்,சூப்பர்,த.ம-9னு டெப்ளேட்டா பின்னூட்டம் போட்டால் தான் ரொம்ம்ப்ப்ப ...நல்ல்லவ்வன்னு சொல்வாங்க :-))

    வேற மாற்றுக்கருத்து சொல்லிட்டாப்போதும் அல்லக்கை கும்பலோட் வந்து திட்டித்தீர்த்துடுவாங்க :-))

    //
    தவிர, பதிவில் ஒரு சிந்தனை மக்கள் முன் வைக்கப்பட்டால் படிப்பவர்கள் அதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டமாகப் போடவேண்டும். பதிவுகள் ஒரு ஆரோக்கியமான விவாத மேடையாக அமைய வேண்டும். அப்போதுதான் பதிவுகளின் முழுப் பயனும் கிடைக்கும். இன்றோ பின்னூட்டங்கள் வெறும் முகஸ்துதிகளாக இருக்கின்றனவே தவிர, ஆக்கபூர்வமான கருத்துகளாக இல்லையென்பது வருத்தத்திற்குரியது.//

    நீங்க இது வரையில் எத்தனைப்பதிவுகளில் போய் ஆக்கப்பூர்வமாக கருத்துரையாடி இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா சார் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில பதிவுகளில் அப்படி போட்டிருக்கிறேன். இனிமேல் ஆக்கபூர்வமான கருத்துகள் உள்ள பதிவுகளில் மட்டும் ஆக்கபூர்வமான பின்னூட்டங்கள் மட்டுமே போடுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. ///
      கலக்கல்,சூப்பர்,த.ம-9னு டெப்ளேட்டா பின்னூட்டம் போட்டால் தான் ரொம்ம்ப்ப்ப ...நல்ல்லவ்வன்னு சொல்வாங்க :-))
      ///

      சத்தியமா அதுதான் உண்மை! ஆரம்பத்துல ஒழுங்கா இருந்த நானும் பின்னாளில் அசத்தல் TM-5 ன்னு போட ஆரம்பிச்சுட்டேன்னா பாருங்களேன் -:(

      எனக்கு இது சுத்தமா பிடிக்கலை ஆனா இங்கே வேற வழியில்லை! ஓட்டு போட்டதை சொன்னாத்தான் நமக்கு ஓட்டு போடுறாங்க! உங்களுக்கு ஒன்னு தெரியுமா என்னுடைய முதல் 20 பதிவுகளில் ஒரு பதிவு கூட பரிந்துரைக்கப்படவேயில்லை.., அதாவது எந்த பதிவும் ஏழு ஓட்டுக்களை பெறவில்லை! அந்த சமயங்களில் எனக்கு பிடித்த.., நல்ல கருத்துள்ள பதிவுகளுக்குத்தான் நான் வாக்களித்துக்கொண்டிருந்தேன்! ஒரு பதிவு பரிந்துரைக்கபடவில்லை என்றால் அது நல்ல பதிவாகவே இருந்தாலும் கூட குறைந்த பட்ச வாசகர்களுக்கு கூட போய் சேருவதில்லை!

      டெம்ப்ளேட் கமெண்ட்ஸை பொருத்தமட்டில்..., பின்னூட்டமே இல்லாத இடங்களில் நன்றாக எழுதிக்கொண்டிப்போரின் தளங்களில் குறைந்த பட்சம் டெம்ப்ளேட் கமெண்ட்ஸாவது போடுங்கங்கறதுதான் என்னோட வேண்டுகோள்! பிரபல பதிவர்களிடமிருந்து கிடைக்கும் ஒரே ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் கூட மிகச்சிறந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் நன்றாக எழுதிக்கொண்டிருக்கும் எவரது நெஞ்சிலும்!

      இது முழுவதும் என் சொந்த ஆதங்கம்! ஒரு வேலை உங்களது பார்வையில் தவறாக கூட தெரியலாம்! என் உணர்வுகளை புரிந்துகொண்டால் உங்களுக்கு நன்றி!

      நேசங்களுடன் வரலாற்று சுவடுகள்!

      நீக்கு
  9. நல்ல கருத்து.
    சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
  10. உண்மையில் எழுதும் எல்லா பதிவுகளிலும் ஏதாவது விஷயம் இருக்க வேண்டும் என்ற நற்சிந்தனையோடு எழுதுபவர்கள் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படுவதில்லை என்பதுதான் முதல் காரணம்!

    ஒரு விசயமும் இல்லாமல் (சினிமா விமர்சன பதிவு உட்பட) மொக்கையாக எழுதும் பதிவுகள் 3000-க்கும் அதிகமான பேஜ்வியூக்களை எட்டும் போதும் ஒரு வாரத்திற்கும் அதிகமாக உழைத்து எழுதப்படும் பதிவுகள் வெறும் 300 பேஜ்வியூக்களை எட்டுவதே சிரமமாக இருந்தால் எங்கிருந்து வரும் எழுதுபவனுக்கு உற்சாகம்!

    இது பொறாமையில் எழுதப்பட்ட கருத்து அல்ல! உண்மை நிலை அதுதான்! மக்களின் வாசிப்பு ஆர்வம் படுமட்டமாக இருக்கும் போது எழுதுபவர்களை குறை சொல்லி புண்ணியம் இல்லை!

    புரிதலுக்கு நன்றி..,
    நேசங்களுடன் வரலாற்று சுவடுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கூற்றை ஒப்புக்கொள்கிறேன். இந்த நிலையை மாற்ற முடியுமா? அதற்கு பதிவர்கள் சந்திப்பு ஏதாவது செய்யமுடியுமா?

      நான் இனி முகஸ்துதி பின்னூட்டங்களுக்காகவோ, வேறு எந்தப் புகழுக்காகவோ மட்டும் எழுதுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.

      நீக்கு
    2. சாமி சார்,

      உங்கள் புரிதலுக்கு நன்றி! மேல உங்களுக்கு பதில் சொல்லலாம்னு பார்த்தேன்,வரலாற்று சுவடு சொன்ன கருத்து இன்னும் தெளிவாக இருக்கு, அதனையும் நீங்க சரியாக எடுத்துக்கொண்டுள்ளீர்கள் எனும் போது உங்களின் புரிதல் தெரிகிறது.

      உங்களை மடக்க நான் அக்கேள்வியை கேட்கவில்லை, பெரும்பாலும் நாம் ,கவர்ச்சியான பதிவுகளில் முகஸ்துதி செய்வதை வழக்கமாக வைத்துக்கொண்டு நல்ல பதிவு வரவில்லைனு வருத்தம் மட்டுமே படுகிறோம் என்பதால் சொன்னது.

      உங்களைப்போன்றவர்கள் துறைசார்ந்து நிறைய எழுத வேண்டும், உங்களது ஈமு வளைப்பு பதிவெல்லாம் படித்துள்ளேன் ,கருத்தும் சொன்னேன் என நினைக்கிறேன்.விவசாயம் சார்ந்து எந்தப்பதிவு என்றாலும் முன்னுரிமைக்கொடுப்பது வழக்கம்.


      கூட்டம் வருதோ இல்லையோ அவசியமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும், ஏன் எனில் தொடர்ந்து நன்றாக எழுதுபவர்கள் கூட ஆதரவு இல்லை எனில் மனச்சோர்வு அடைந்து அவர்களும் தங்கள் பாதையைமாற்றிக்கொள்ளக்கூடும் எனவே உங்களால் முடிந்த அளவுக்கு நல்லப்பதிவுகளை ஊக்க்கபடுத்தலாம், நான் முடிந்த அளவுக்கு அனைவரது பதிவுகளும் படிப்பேன்,சூழ்நிலைப்பொறுத்து பின்னூட்டமிடுவேன்.

      நன்றி!

      நீக்கு
    3. வவ்வால் அவர்களே,
      என்னுடைய வயதிற்கு இனிமேல் புகழுரைகள் வந்து ஆகப்போவது ஒன்றுமில்லை. இந்த நிலையில் என் மனதிற்குப் பிடித்த பதிவுகளை மட்டும் எழுதப் போகிறேன்.
      நன்றி

      நீக்கு
    4. சாமி சார்,

      நாம் என என்னையும் சேர்த்து பொதுவாக சொன்னது ,உங்களை மட்டும் சொல்லவில்லை,ஆக்கப்பூர்வமான பதிவுகளை எழுதுங்கள்,நிறைய பேரு சைலண்டாப்படிச்சிட்டு போறவங்க இருக்காங்க, எனவே கவலைப்பட தேவையில்லை, ஹி...ஹி ,அப்புறம் சண்டைப்போட, கருத்து சொல்ல நான் இருக்கேன் :-))

      அப்புறம் இந்த வயசுக்கு மேலன்னு என்னமோ ரொம்ப வயசான போல சொல்லிக்கிட்டு இருக்கிங்க...சின்ன வயசில எடுத்த படம் ஒன்றை புரோஃபைலில் போட்டுக்கிட்டு யூத்தா வந்து எழுதுங்க சார்(எல்லாம் அதான் செய்யுறாங்க) அமிதாப்பச்சனை விட யூத்தா தான் இருக்கீங்க :-))

      நீக்கு
    5. ///
      நன்றாக எழுதுபவர்கள் கூட ஆதரவு இல்லை எனில் மனச்சோர்வு அடைந்து அவர்களும் தங்கள் பாதையைமாற்றிக்கொள்ளக்கூடும்
      ///

      உண்மை! உண்மை! ஆகையால் தான் கூறினேன்.., நல்ல கருத்துக்களை எழுதிக்கொண்டிருப்போர்களுக்கு குறைந்த பட்சம் டெம்ப்ளேட் கமெண்ட்ஸாவது போடுங்கள் என்று!

      நீக்கு
    6. எதற்க்குமே கவலை படாமல் தொடர்ந்து நல்ல கருத்துக்களையே எழுதிக்கொண்டு வருபவர்கள் நிச்சயம் என்றாவது ஒரு நாள் திரும்பிப்பார்க்கப்படுவார்கள்! ஆனால் அதற்க்கு கொஞ்சம் கால தாமதம் ஆகலாம்! அதுவரையில் சோர்ந்துவிடாமல் தொடர்ந்து நல்ல கருத்துக்களையே எழுதிவரும் மன வலிமை நம் அனைவருக்கும் கிடைக்கபெருவதில்லை...நம்மில் வெகு சிலருக்கே அந்த வலிமை கிடைக்கப்பெறுகிறது!

      நேசங்களுடன் வரலாற்று சுவடுகள்!

      நீக்கு
  11. //ஆனால் சில பதிவுகள் படிப்பவர்களின் மனதைக் கெடுக்கும் விதமாகவோ அல்லது எதற்கும் உதவாத தகவல்களையோ தருகின்றன. அவ்வாறு எழுதுபவர்கள் சிறிது சிந்திக்கவேண்டும். நம் பதிவில் எழுதும் சிந்தனை மக்களுக்கு ஏதாவது வகையில் உதவுமா, இல்லையென்றால் அப்படிப்பட்ட பதிவுகளை எழுத தயங்க வேண்டும்.//

    மிகவும் நியாயமான ஆதங்கம் தான். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. உண்மைதான்! உங்கள் கருத்தை வரவேற்கிறேன்! அதே சமயம் வரலாற்றுச் சுவடுகள் கூறுவதையும் ஏற்க வேண்டி உள்ளது. என்னுடைய கதை கவிதைகளுக்கு இல்லாத வரவேற்பு பிற வகையான மொக்கை பதிவுகளுக்கு இருக்கிறது. யாருமில்லாத கடையில் எதற்கு டீ ஆத்த வேண்டும் என்பார் விவேக். பதிவுகள் எழுதுவதே மற்றவர்கள் படிக்க வைக்கத்தான் அதனால் தான் சந்தனங்களுடன் சாக்கடைகளும் கலக்க வேண்டியுள்ளது.

    இன்று என் தளத்தில் வாலி நாணி கூனியிருக்க வேண்டாமா? தினமணி கட்டுரை! அறிஞர்களின் பொன்மொழிகள்! http://thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய பதிவு http://thalirssb.blogspot.in ஐ படித்தேன். வயது கூடிய பின் முதிர்ச்சியும் கூடியிருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்வது நியாயமே. தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்ள அசாத்திய தைரியமும் எதையும் பட்சபாதமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவமும் வேண்டும்.

      என்னுடைய இந்தப் பதிவில் நான் சொல்ல விரும்பும் ஒரு செய்தி. பதிவுலகில் நம் கருத்துக்களை சுதந்திரமாக சொல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதை நாம் முறையாகப் பயன்படுத்தலாமே என்று சொல்ல விரும்புகிறேன்.

      நீக்கு
  13. ஒத்த அடி ஐயா..சரியா சொல்லியிருக்கிறீங்க காத்திரமான பதிவுகள்களைக் கொண்ட பதிவுலகம் விரைவில் மிக விரைவில் (பதிவர் சந்திப்பின் பின்) கிடைக்கவிருக்கிறது என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. உண்மை. எழுதுபவன் சொல்ல வரும் கருத்துக்கள் வாசிப்பவனுக்குப் போய்ச் சேரவேண்டும். எழுதுவதற்கு ஒரு களம் வலைப்பதிவுகள்.நான் பின்னூட்டமிட்டால் பிற பதிவர்களும் இடுவார்கள். குறை கூறுவதையோ, அவரவர் அபிப்பிராயத்தையோ பதிவு செய்வதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை.என் பதிவுகளில் பல தடவை எழுதும் கருத்துக்கள் வாசிப்பவரிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்ளமுடிவதில்லை. பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் கருத்துப் பதிவு செய்பவர் மிகவும் குறைவு. இப்போதெல்லாம் முன்னைப் போல் நான் அதிகம் கவலைப் படுவதில்லை. என் கருத்துக்கள் பதிவாகின்றன. பலரும் படிக்கிறார்கள்

    பதிலளிநீக்கு