புதன், 17 டிசம்பர், 2014

பாப்பாத்தி அம்மா மாடு வந்திருச்சு

                                   


ஒரு ஊர்ல ஒரு சின்ன அக்ரஹாரம். அதுல பதினைந்து வீடுகள். எல்லொருக்கும் நிலம் நீச்சுன்னு சௌகரியமா வாழ்க்கை ஓடிண்டிருக்கு. ஒவ்வொரு வீட்லயும் ஒவ்வொரு பசுமாடு. சாஸ்திரோக்தமா பூஜைக்கு தீட்டுப் படாத பசுமாட்டிலிருந்து பால் கறந்துதான் சாமிக்குப் படைக்கணும். அதுக்காகத்தான் அவாளவாள் ஆத்தில பசுமாடு வளர்க்கறா.

ஆனாப் பாருங்கோ, அந்தப் பசுமாட்டப் பாத்தா எல்லா மாமிகளுக்கும் பயம். அது கொம்பை ஆட்டினா ஐயோன்னு கத்திண்டு எல்லோரும் ஆத்துக்குள்ள ஓடிடுவா. அதனால இந்தப் பசு மாட்டுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போய் சாயந்திரம் கொண்டுவந்து கொட்டிலில் கட்டிவிட்டுப் போவதற்கு ஒவ்வொரு ஊர் அக்ரஹாரத்திற்கும் ஒரு மாட்டுக்காரன் இருப்பான்.

நான் சொல்றதெல்லாம் 100 வருடத்திற்கு முந்தைய கதை. இன்னிக்குத்தான் பூத் பால்தான் எல்லாத்துக்கும்னு ஆயிப்போச்சே. பாக்கெட் மேலே கொஞ்சம் ஜலம் தெளிச்சா  தீட்டு எல்லாம் போயிடும்கறது சாஸ்த்ரம்.

இப்படி இருக்கச்சே, ஒரு நாள் ஒரு மாமிக்கு இந்த மாட்டுக்காரன் பேர்ல கோவம். முந்தின நாள் அரைப் படி பால் கொறச்சலாக் கறந்தா கோவம் வராதா? அதனால அன்னிக்குக் காலைல மாட்டுக்காரனை சத்தம் போட்டுட்டள். நீ மாட்டை சரியா மேய்க்கல, அதனாலதான் பால் கொறஞ்சு போச்சுன்னு சத்தம் போட்டாச்சு.

அன்னிக்கீன்னு பாத்து அந்த மாட்டுக்காரன் ஊட்லயும் அவன் பொண்டாட்டி கூட அவன் சண்டை போட்டுட்டு வந்திருக்கான். மாமியும் இப்படி சத்தம் போட்டதால, அவனுக்கு கோவம் இன்னும் ஜாஸ்தியாயிடுச்சு. இருந்தாலும் மாமி கிட்ட கோவத்தைக் காட்ட முடியுமோ. பேசாமல் போய்ட்டான். பகல் பூராவும் அவனுக்கு மனசே சரியில்லை. இந்த மாமி இப்படிக் கேட்கலாச்சே என்று மனதிற்குள்ளேயே பொருமிக்கொண்டிருந்தான்.

அதனால் என்ன பண்ணினான் என்றால் அந்த மாமியின் மாடு அவாள் வீட்டுக்கு எதிரில் வந்தவுடன் " பாப்பாத்தியம்மா, மாடு வந்துட்டுது, புடிச்சுக் கட்டிக்கோ" அப்படீன்னு சத்தமாச் சொல்லீட்டு போய்ட்டான். அந்தக் காலத்தில சூத்திரப் பயலுகளுகளெல்லாம் எல்லா அய்யர்களையும் பாப்பான் என்று சொல்லித்தான் பழக்கம். நேர்ல பாக்கறப்ப "சாமி" அப்படீம்பான்.

இப்படி ஆன பிறகு அந்த மாமி என்ன செய்தாள் என்பது வேற கதை. இந்த சொலவடை ஏன் வந்தது என்றால் ஒரு வேலையை அரைகுறையாக முடிப்பவனுக்காகச் சொல்லப்படுவது.

இந்தக் கதை பாப்பாத்தியம்மாள் கதையாதலால் ஆங்காங்கே அவாள் பாஷை வந்து விட்டது. யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அய்யர்களே தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது அடுத்தவனை "அந்தப் பாப்பான் எதிர்ல வந்தான் அதனாலதான் அந்தக் காரியம் நடக்கல" என்று பேசிக்கொள்வார்கள். ஆகவே நான் ஒன்றும் பெரிதாகத் தவறு இழைத்து விடவில்லை என்று நம்புகிறேன்..

வலைச்சர ஆசிரியர் பணி முடிந்தவுடன் நான் எழுதிய பிரிவுரையில் இந்தப் பழமொழியைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது இந்தக் கதையை ஒரு தனி பதிவாகப் போடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். அதனால்தான் இந்த்ப பதிவு.

13 கருத்துகள்:

 1. பதிவு முழுமை அடையாமல் நிற்பது போலத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 2. சாஸ்த்ரம் எல்லாம் எப்படி மாறுகிறது....? ஹா... ஹா...

  அப்புறம் என்னாச்சி...?

  பதிலளிநீக்கு

 3. ஒரு பணியை முழுமையாய் முடிக்காமல் அதை இன்னொருவரிடம் விட்டு செல்வதைக் குறிக்கத்தான் இந்த சொலவடை என்பது சரிதான். இதுபோல் கொங்கு நாட்டில் வழங்கும் சில சொலவடைகள் பற்றி பதிவு எழுதலாமே. (பார்த்தீர்களா.தங்களுக்கு எழுத ஒரு ‘சப்ஜெக்ட்’ தந்துவிட்டேன்!)

  பதிலளிநீக்கு
 4. அய்யா V.N.S அவர்கள் சொன்னதை அப்படியே வழிமொழிகின்றேன். பழமொழிகள் விளக்கக் கதைகளின் வரிசையில் அடுத்த பழமொழியை எதிர்பார்க்கிறேன்.
  த.ம.3

  பதிலளிநீக்கு
 5. உங்கள் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன் நீங்கள் ஒரு மசக்கவுண்டர் என்று நிரூபித்து விட்டிர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரைப் போட்டு கருத்துத் தெரிவித்திருந்தால் தைரியசாலி என்று மதிப்புக் கொடுத்திருப்பேன். பேடிகளெல்லாம் எனக்கு மரியாதை கொடுத்தால் அது எனக்கு அவமானம்.

   நீக்கு
 6. //இந்தப் பதிவுகளை யாரும் காப்பியடித்துக் கொள்ளலாம். நன்றி சொல்ல வேண்டியதில்லை//-
  இந்தக் குசும்பு ரசித்தேன்.
  பதிவு பற்றி ஈழத்தில் என் அறிவுக்கெட்டியவரை, அவரவர் வீட்டுப்பசுக்களில் அவர்கள் விட்டாரே பால் கறப்பர். எங்கள் வீட்டில் மிருக வளர்ப்பில் எனக்குப் பிரியம் அதனால் என் 12 வயதிலேயே ஆடு,மாட்டில் பால் கறந்துள்ளேன்.
  சில பசுக்கள் எனக்கே கட்டுப்படும்.
  ஐயர் பாசை , ஈழத்தில் இல்லை. ஆனாலும் எனக்கு சில பாலச்சந்தர் படங்கள் மூலமும், வியட்நாம் வீடு படத்தாலும், சோவின் எங்கே பிராமணன்; கூவம் நதிக்கரையினிலே, மற்றும் பல எழுத்தாளர்களாலும் அறிமுகம், அதனால் அதில் ஒரு விருப்பமும் கூட. அதுபோல் சென்னைத் தமிழில்
  எனக்குக் கொள்ளை இன்பம், சோவின் - ஜக்கு எனும் பாத்திரம் அந்தத் தமிழுக்கு நான் அடிமை.
  சென்னை வந்த போது சிலரிடம் ஆசையாக பேசும் படி கேட்டு மகிழ்ந்தேன். கோயம்பேடு சந்தையில்
  ஒரு சிறு சச்சரவு இரு வியாபாரிகளுக்கிடையில், சில நிமிடங்களில் சுமார் 10 ஆண்கள் பெண்களென சென்னைத் தமிழில் வாச்சிலப்பாட நான் வாய்பிளந்து ரசித்தேன். நம்ம சென்னைத் தமிழ் என்ன? அழகு. இது கேலியல்ல அதை ரசிக்க எனக்குத் தெரிகிறது.
  ஆனாலும் பல வியாபார நிலையங்களில் என் "சிலோன் தமிழுக்கு" ஏகப்பட்ட மரியாதை, பல விற்பனை பெண்களும் ஆண்களும் "பேசுங்க சார்" என கேட்டார்கள்.
  அதனால் அப்பப்போ "ஐயர் பாசை" யில் பிளந்து கட்டுங்கோ!
  இந்தப் பெயரில்லாதவருக்கு என்ன? பிரச்சனை.
  பாரதி சொல்கிறார்- "பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியனைத் துரை என்ற காலமும் போச்சே"
  அப்போ அது இருந்துள்ளது தானே! இவர் ஏன் இப்படிக் கோவப்படுகிறார்.

  பதிலளிநீக்கு
 7. அந்த பழமொழிக்குப் பின்னர் இவ்வளவு கதை உள்ளதா? தங்களின் மூலமாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு