வெள்ளி, 19 டிசம்பர், 2014

என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும்


1962 ம் வருடம். அப்போது எனக்கு 28 வயது. கல்யாணம் ஆகவில்லை. ஆனால் குடும்பப் பொறுப்பு முழுவதும் என் தலையில். என் தகப்பனார் குடும்பச் சுமையைத் தாங்கிக்கொள்ள முடியாத மன நிலையில் பொறுப்பை என்னிடம் விட்டு விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தேசாந்திரம் சென்று விட்டார்.

அப்போது இந்தப் படம் வந்து சக்கைப்போடு போட்டது. அதில் இடம் பெற்ற "சிங்கார வேலனே " பாட்டு தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலித்துக்கொண்டிருந்தது. அப்போது இருந்த பாட்டுக்கேட்கும் சாதனங்கள் ரேடியோவும் கிராமபோன் பிளேயரும்தான்.

என்னிடம் ரேடியோ கூட கிடையாது. எங்காவது ரோட்டில் போய்க்கொண்டிருக்கும்போது இந்தப் பாட்டு ஏதாவது கல்யாண வீட்டில் இருந்தோ அல்லது கோயில் திருவிழாவிலிருந்தோ, ஒலி பெருக்கி மூலம் மூலம் காதில் விழுந்தால் அந்தப் பாட்டு முடியும் வரை அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் போவேன்.

அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் என்னவென்றால், எனக்கு வசதி வந்தால் ஒரு கிராமபோன் பிளேயரும் இந்தப் பாட்டின் ரெக்கார்டும் வாங்கி சலிக்கும் வரைக்கும் கேட்கவேண்டும் என்பதுதான்.

                           

காலம் மாறியது. தொழில் நுட்பங்கள் மாறின. எனக்கு வசதி வந்த நாளில் கிராமபோன் மிஷின் காணாமல் போயிற்று. ஆனலும் என்ன? அதன் இடத்தில் வேறு நுட்பங்கள் வந்து விட்டன.

டேப் ரிகார்டர் வந்து ஒரு இருபது ஆண்டுகள் கோலோச்சியது. ஐபாட் வந்தது. உங்கள் அபிமான பாடல்களை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு போகலாம். ஆனாலும் இன்று வந்துள்ள டேப்ளட்டுகளும் கிண்டில் கருவிகளும் இசை கேட்கும் அனுபவத்தை தலைகீழாய் மாற்றிவிட்டன.

இன்று, இதோ என் பெட்ரூமில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் என் கைப்பிடியில் எனக்காகப் பாடுகிறார்கள். என் பெட்ரூமில் கச்சேரி மேடையே போட்டாகி விட்டது. சுதா ரகுநாதனின் கச்சேரியைக் கண்ணுக்கு எட்டாத தூரத்திலிருந்து கேட்டது போய், இப்போது என் கைக்கெட்டும் தூரத்திலிருந்து பாடுவதைக் கேட்க, காண முடிகிறது.

இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை உண்டாக்கி, அந்தக் கருவிகளை வாங்கி இந்த இன்பங்களை அனுபவிக்க பழனி. கந்தசாமிக்கு அருள் புரிந்த அந்த சிக்கில் சிங்கார வேலவனுக்கும் என்னப்பன் பழனி முருகனுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.                                  

12 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான தலைப்பில்
  சுவார்ஸ்யமான தகவல்
  எனக்கும் அதிகம் பிடித்த பாடல்
  இன்றும் கேட்டு மகிழ்ந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இனிய நினைவுகளில் தொடங்கி, சட்டென்று நன்றி நவிலலில் முடித்து விட்டீர்களே...

  :))))))

  பதிலளிநீக்கு
 3. //இப்படிப்பட்ட தொழில் நுட்பங்களை உண்டாக்கி, அந்தக் கருவிகளை வாங்கி இந்த இன்பங்களை அனுபவிக்க பழனி. கந்தசாமிக்கு அருள் புரிந்த அந்த சிக்கில் சிங்கார வேலவனுக்கும் என்னப்பன் பழனி முருகனுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.//


  அதோடு இந்த தொழில் நுட்பங்களை யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே கற்றுக்கொள்ளும் அறிவைக் கொடுத்ததற்கும் நன்றி சொல்லலாமே.

  நீங்கள் என் அண்ணன் முனைவர் சிவசுப்ரமணியன் அவர்களுக்கு பழுது நீக்கி கொடுத்த Slide Projector பற்றி என் அண்ணன் மகனிடம் விசாரித்தேன். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அதனுடைய இடத்தை பிடித்துக்கொண்டதால் அது இப்போது பரணில் ‘தூங்குவதாக’ சொன்னார். மேலும் விசாரித்தபோது வல்லுனர்களே அதை சரி செய்ய முடியாது என கைவிரித்த போது தாங்கள் தான் அதை சரி செய்து கொடுத்ததாக நன்றியுடன் நினைவு கூர்ந்தார். நீங்கள் சகலகலா வல்லவர் என்பதை சொல்லியா தெரியவேண்டும்?

  பதிலளிநீக்கு
 4. என்றும் இனிக்கும் பாடல் . பகிர்வுக்கு நன்றி.
  தொழில்நுட்பத்திற்கும், இறைவனுக்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும் சார்.

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் தந்த வீடியோவை கண்டு கேட்டு ரசித்தேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது. தலைப்பு நல்ல நகைச்சுவை.
  த.ம.5

  பதிலளிநீக்கு
 6. எனது விருப்பமான பாடல்கள் வரிசையில் இதுவும் உண்டு ஐயா.

  பதிலளிநீக்கு